திருப்பத்தூர்: 68ஆம் ஆண்டு எருது விடும் விழா கோலாகலம்!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை கிராமத்தில் திரெளபதியம்மன் மயில் திருவிழாவை முன்னிட்டு 68ஆம் ஆண்டு 'எருதுவிடும் திருவிழா' இன்று (ஜன.23) நடைபெற்றது. இதனை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இதில் நிம்மியம்பட்டு, வெள்ளகுட்டை ஆம்பூர், வாணியம்பாடி, மாதனூர், மற்றும் ஆந்திரா மாநில சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு காளைகளை வாடிவாசல் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.
குறிப்பிட்ட தூரத்தை குறுகிய நொடிகளில் கடந்த காளைக்கு முதல் பரிசாக 1 லட்சத்து ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 71 ஆயிரமும், மூன்றாவது பரிசாக 51 ஆயிரம் என தொடர்ந்து ஆறுதல் பரிசு உட்பட 41 பரிசுகளும் வெற்றி பெற்ற காளைகளுக்கு வழங்கப்பட்டன. இதனைக்காண திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் என அங்கு திரண்டிருந்தனர். பாதுகாப்பு பணியில் வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.