வெள்ளத்தில் 6 ஆயிரம் கோழி குஞ்சுகள் உயிரிழப்பு…வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் உரிமையாளர்! - எட்டயபுரம் கோழி பண்ணை
Published : Dec 19, 2023, 7:09 PM IST
தூத்துக்குடி: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த தொடர் மழை காரணமாக, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்தது. தொடர் மழையால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியது.
இந்நிலையில், எட்டயபுரம் அருகே உள்ள சோழவாரத்தைச் சேர்ந்த குருசாமி என்பவர் சொந்தமாக கோழி பண்ணை வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இந்த கோழி பண்ணையில் சுமார் 6 ஆயிரம் கோழிக்குஞ்சுகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் எட்டயபுரம் பகுதியில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக குருசாமியின் கோழி பண்ணைக்குள் காற்றாற்று வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் கோழி பண்ணையில் இருந்த 6 ஆயிரம் கோழிக்குஞ்சுகளு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன. மேலும் கோழிப்பண்ணை முற்றிலுமாக சேதம் அடைந்ததில் பல லட்ச ரூபாய் வரை தனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரசு தனக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோழிப்பண்ணை உரிமையாளர் குருசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.