திருப்பூரில் 50வது சர்வதேச பின்னலாடை கண்காட்சி.. களைகட்டிய பேஷன் ஷோ!
Published : Oct 13, 2023, 8:48 AM IST
திருப்பூர்: இந்தியா நிட்பேர் அசோசியேசன் (ஐ.கே.எப்.ஏ.) சார்பில், 50வது சர்வதேச பின்னலாடை பொன்விழா கண்காட்சி நேற்று (அக்.12) பழங்கரையில் உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் துவங்கியது. இந்த ஆடை அலங்கார பேஷன் ஷோவில் திருப்பூரில் உள்ள எட்டு நிறுவனத்தினர் பங்கேற்றனர்.
கண்காட்சியில் ஆடை அலங்கார அணிவகுப்பு நடந்தது. இதில், நவீன காலத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் ஆடைகளை அணிந்தபடி, ஆண் மற்றும் பெண் மாடலிங் கலைஞர்கள் ஒய்யாரமாக நடந்து வந்தனர்.
திருப்பூர் பின்னலாடை துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் விதமாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பில், 50வது இந்திய பின்னலாடை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது ஆடைகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.
மேலும், இந்த கண்காட்சிக்கு ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற பிற நாடு வணிகர்களின் பிரதிநிதிகள் வருகை தந்துள்ளதால், அவர்களுக்கு ஏற்ற வகையில் ஆடை அலங்கார பேஷன் ஷோ நடைபெற்றது. பேஷன் ஷோவில் திருப்பூரின் முன்னணி நிறுவனங்கள் தயாரித்த ஆடைகளை அணிந்த மாடல்கள், ஒய்யாரமாக நடந்து வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஏராளமான தொழிற்துறையினர் பங்கேற்று கண்டுகளித்த கண்காட்சி, வர்த்தகர்களை பெரிதும் கவர்ந்தது.
பொன்விழா கண்காட்சியை இந்தியா நிட்பேர் அசோசியேஷனுடன், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், பையிங் ஏஜென்ட் அசோசியேஷன், பிராண்ட் சோர்சிங் லீடர்ஸ் (பி.எஸ்.எல்.), கரூர் ஆடை உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கம், சென்னை அப்பேரல் சங்கம், அபார்ட் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.