பழனி முருகன் கோயிலில் ரூ.4 கோடி உண்டியல் காணிக்கை! - 4 crore counted in palani hundi collection
Published : Dec 1, 2023, 9:24 PM IST
திண்டுக்கல்: முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்ற வண்ணம் உள்ளனர். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பழனி கோயிலுக்கும் செல்வதால் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பழனி மலைக்கோயிலில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்று வந்தது. இதில் நான்கு கோடியே ஒரு லட்சத்து 68 ஆயிரத்து நானூற்று பத்து ரூபாய் ரொக்கமாகவும், ஆயிரத்து 610 கிராம் தங்கமும், 15 ஆயிரத்து 752 கிராம் வெள்ளியும், 814 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் கணக்கிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உண்டியல் எண்ணிக்கையில் கோயில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு கருதி உண்டியல் எண்ணும் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. உண்டியல் எண்ணிக்கை எண்ணும் பணி நடைபெற்றதால் பக்தர்கள் இரண்டு நாட்களுக்கு மட்டும் அப்பகுதிக்குச் செல்ல கோயில் நிர்வாகம் தடை விதித்தது.