நடுக்கடலில் திடீரென பற்றி எரிந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான படகு - காரணம் என்ன? - விழுப்புரம் கடலோர கிராம பகுதியில் தீ விபத்து
விழுப்புரம்:மரக்காணம் அடுத்த அனுமந்தைகுப்பம் எனப்படும் கடலோர கிராமப் பகுதியைச் சேர்ந்தவர், மதியழகன். இவரிடம் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைபர் படகு உள்ளது. இதனை வைத்து அவர் மீன் பிடித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு (ஜூலை 4) கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுவிட்டு, தன்னுடைய பைபர் படகினை நிறுத்துவதற்காக கடலில் நங்கூரம் கொண்டு நிறுத்தி வைத்திருந்தார்.
அப்போது நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில், அவருடைய 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைபர் படகு மர்மமான முறையில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதனைக் கண்ட ஊர் பொதுமக்கள், மற்ற விசைப்படகுகள் மூலம் அங்கு சென்று தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர்.
இருப்பினும் கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க முடியாமல் ஊர் மக்கள் திணறினர். இதனால் படகு முழுவதுமாக எரிந்து சாம்பலானது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள், படகினை மர்ம நபர்கள் யாரேனும் தீயிட்டுக் கொளுத்தினார்களா, அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் தீப்பற்றி எரிந்ததா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மரக்காணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் மீன்பிடித்தொழில் முக்கியத்துவம் வாய்ததாக இருந்த போதிலும், இப்பகுதியில் துறைமுகம் இல்லாத காரணத்தால் படகுகளை நடுக்கடலில் நிறுத்தி வைக்கவேண்டிய நிலை உள்ளது. அரசிடம் பலமுறை இப்பகுதியில் துறைமுகம் அமைக்க வேண்டி கோரிக்கை வைத்தும் இதுவரை செவிசாய்க்கவில்லை. எனவே, அரசு உடனடியாக மரக்காணம் துறைமுகம் பணியை மீண்டும் துவங்க வேண்டும் என்றும், விசைப்படகை தீ வைத்து கொளுத்திய மர்ம நபர்களை கண்டுபிடிக்கவேண்டும் எனவும் மீனவர் சமுதாய மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.