ஆடைக்குள் மறைத்து மளிகை பொருட்கள் திருட்டு... சிசிடிவியில் சிக்கிய பெண்கள்! - காஞ்சிபுரம் மாவட்ட செய்தி
காஞ்சிபுரம்: சாலை தெரு பகுதியில் தனியார் சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. கடந்த புதன்கிழமை மாலை இந்தக் கடைக்கு மூன்று பெண்கள் வந்துள்ளனர். மளிகைப் பொருட்கள் பிரிவு, பூஜைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், என அனைத்து பிரிவுகளுக்கும் சுற்றிச் சுற்றி வந்தனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தங்களுக்குத் தேவையான பொருட்களை தேர்ந்தெடுத்து கேஷ் கவுண்டர் அருகே வரும் போது சொற்ப அளவிலான பொருட்களுக்கு மட்டுமே பில் போட்டனர். மூன்று பெண்களில் ஒருவர் எவர்சில்வர் ஸ்பூன் உள்ளிட்ட பொருட்களை வாங்கி 80 ரூபாய் பணம் செலுத்தினார். மற்றொரு பெண் குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி 70 ரூபாய் செலுத்தினார். இவ்வாறாக அந்த மூன்று பெண்களும் சேர்ந்து 150 ரூபாய்க்கு தான் பொருட்களை வாங்கியுள்ளனர்.
அந்த மூவரும் கடையை விட்டு வெளியே செல்லும் போது அவர்களின் நடையில் வித்தியாசம் இருந்ததை சூப்பர் மார்க்கெட்டின் உரிமையாளர் கவனித்து சந்தேகம் அடைந்துள்ளார். உடனே அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது, அப்பெண்கள் பொருட்களைத் தேர்ந்தெடுத்து ஆளில்லாத நேரத்தில் தங்களின் ஆடைக்குள் மறைத்து வைத்து திருடிச் சென்றது தெரியவந்தது.
சூப்பர் மார்க்கெட்டின் ஊழியர்கள் வெளியே வந்து தேடிப் பார்த்த போது அந்த மூன்று பெண்களும் காணவில்லை. அந்தப் பெண்கள் ஆடைக்குள் பொருட்களை மறைத்து எடுத்து சென்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: தனியார் பேருந்து மோதி இளைஞர் பலி; பேருந்தை நொறுக்கி சாலைமறியலில் ஈடுபட்ட உறவினர்கள்