மருதமலையில் 3 கி.மீ தூரத்துக்கு தீத்தடுப்பு கோடுகள் - தீத்தடுப்பு கோடுகள்
மருதமலை: கோடைக் காலத்தின் தொடக்கமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போதே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. பொதுவாகக் கோடைக் காலத்தில் ஏற்படும் வறட்சியால் மலைப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும். சில நேரங்களில் வேகமாக பரவும் காட்டுத்தீயால், அடிவாரங்களில் உள்ள விளைநிலங்களும் சேதம் அடைய வாய்ப்புள்ளது. இதை தடுக்கும் வகையில் கோடை காலங்களில் மலைப்பகுதிகளை ஒட்டி, வனத்துறையினரால் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் கோவையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய இடங்களில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் கோவை வனச்சரகம் இணைந்து மருதமலை காட்டுப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகளை அமைத்தனர். மருதமலை முதல் யமுனா நகர் வரை, சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்குத் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை சரக வனத்துறை மற்றும் கோவை வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்டோர் இப்பணியை மேற்கொண்டனர். இதன் மூலம் காட்டுத்தீ பரவாமல் தடுக்க முடியும் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ பரவாமல் தடுக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள செடிகளுக்குப் பொதுமக்கள் தீ வைக்கக் கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: கோமாவில் இருக்கும் வேட்டை தடுப்பு காவலர்.. சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பு!