வீடியோ: ஹரித்வாரில் 3.75 கோடி தீபங்கள் ஏற்றிய நேபாள பெண்கள்
ஹரித்வார்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பவுரி காட் பகுதியில் நேபாள பெண்கள் 300 பேர் கணவர்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டி சுமார் 3.75 கோடி தீபங்களை ஏற்றி வழிபாடு நடத்தினர். இந்த விளக்குகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு மூங்கிலால் செய்யப்பட்டவையாகும். நேபாள நாட்டின் தனித்துவமான கலாச்சாரத்தின் படி, அந்த நாட்டு பெண்கள் தாங்களாகவே பருத்தியிலான திரிகளை உருவாக்கி புனித தலங்களில் விளக்குகளை ஏற்றினால், தங்களது கணவர்களுக்கு நீண்ட ஆயுளும், குடும்பத்தில் செழிப்பும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
அதனடிப்படையில், நேபாளத்தை சேர்ந்த 300 பெண்கள் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாருக்கு வருகை தந்து விளக்குகளை ஏற்றினர். புராணங்களின் படி, கங்கா காட் பகுதியில் பெண்கள் தீபம் ஏற்றி வைப்பதன் மூலம், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குணமாகும் என்று நம்பப்படுகிறது. இதன் அடிப்படையில் காலங்காலமாக பெண்கள் ஹரித்வாருக்கு வந்து விளக்குகளை ஏற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த விளக்கின் திரிகளை பெண்களே கொண்டுவருவது ஐதீகமாகும்.