Salem - சேலம் கோழிப்பண்ணையில் 2500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்! - ரேஷன் அரிசி பறிமுதல்
சேலம்: சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டிணம் அடுத்த முட்டை கடை என்ற பகுதியில் ஜெயமுருகன் கோழிப்பண்ணை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த நிலையில் இந்தப் பண்ணையில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றை அரைத்து கோழிகளுக்கு தீவனமாக வழங்கப்படுவதாகவும், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பறக்கும் படை, தனி வட்டாட்சியர் ராஜேஷ் குமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் பறக்கும் படைக்குழுவினர் கோழிப் பண்ணைப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது குடோனில் மூட்டை மூட்டையாக 2500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அரிசியைப் பறிமுதல் செய்து சேலம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக பறக்கும் படை தனி தாசில்தார் ராஜேஷ்குமார் நடத்திய விசாரணையில், பிராய்லர் முட்டைக் கோழிகளுக்கு தீவனமாக அரைத்து வழங்க முறைகேடாக, ரேஷன் அரிசியைக் கொண்டு வந்து பதுக்கப்பட்டு இருந்ததும், வெளிமார்க்கெட்டுகளில் ரேஷன் அரிசி வாங்கப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து ரேஷன் அரிசி பதுக்கலில் ஈடுபட்ட ஜெயமுருகன் கோழிப்பண்ணை மேலாளர் வெங்கடாசலம்(47) கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.