காணாமல் போன 210 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்த வேலூர் காவல்துறை! - வேலூர் சரக டிஐஜி எம் எஸ் முத்துசாமி
Published : Oct 10, 2023, 7:29 PM IST
வேலூர்:வேலூர் மாவட்ட காவல்துறையினர் உருவாக்கிய செல்போன் டிராக்கர் (Cell Tracker) வாட்சாப் எண் மூலம் (9486214166) தொலைந்து போன மற்றும் திருடு போன செல்போன்கள் குறித்துப் புகாரளிக்க, இந்தாண்டு ஜூலை 03ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல், வேலூர் மாவட்டம் முழுவதும் 821 புகார்கள் பதிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், முதற்கட்டமாக 162 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக 40 லட்சம் மதிப்புடைய 210 செல்போன்கள், கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவற்றை வேலூர் சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி மற்றும் வேலூர் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் இன்று செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். Cell Tracker சேவை அறிமுகம் செய்யப்பட்ட 5 மாதத்தில், இரண்டு கட்டங்களாக 372 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து பேசிய வேலூர் சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி, Cell Tracker சேவை மூலம் வேலூர் காவல் துறையினர் சிறப்பாக செயல் படுவதாகவும், வேலூர் மாவட்டத்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தொடர்ந்து காணாமல் போன மற்றும் திருட்டு போன செல்போன்களை கண்டுபிடிக்கத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.