திருப்பூர் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பிற்காக 1 லட்சம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்..! - Laddu preparation at Tirupur Perumal temple
Published : Dec 21, 2023, 5:45 PM IST
திருப்பூர்:வரும் சனிக்கிழமை (டிச.23) வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருப்பூர் வீர ராகவப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று நடக்க உள்ள சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வைகுண்ட ஏகாதசி நாளில் இந்த கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வருகை தரும் பக்தர்களுக்குத் திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில் பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் பிரசாதமாக 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருப்பூர் காமாட்சி அம்மன் கல்யாண மண்டபத்தில் நடந்து வரும் இப்பணியில், 200 தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு லட்டு தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்குத் தலைக்கவசம், முக கவசம், கிளவுஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுப் பாதுகாப்பான முறையில் லட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.
விருப்பமுள்ள தன்னார்வலர்கள் இந்த பணிகளில் வந்து கலந்து கொள்ளலாம் என்றும் ஸ்ரீவாரி டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.