பழனி கோயிலில் மொட்டை அடிக்க பக்தர்களிடம் பணம் வசூல்.. 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம்! - சண்முகநதி
Published : Sep 9, 2023, 1:26 PM IST
திண்டுக்கல்:பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோயிலில் முடிக்காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது வழக்கம். எனவே பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் திருஆவினன்குடி, கிரி வீதி, சண்முகநதி பகுதியில் முடிக்காணிக்கை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு கட்டணம் ஏதுமின்றி பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்துகின்றனர். இந்நிலையில் பழனி கோயில் முடிக்காணிக்கை நிலையங்களில் மொட்டை அடிக்க பக்தர்களிடம் பணம் வசூலிப்பதாக பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மேலும், இது தொடர்பாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் மீது கோயில் நிர்வாகம் சார்பில் அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று (செப். 9) கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் மொட்டை அடிக்க தொழிலாளர்கள் 2 பேர் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பக்தர்கள் கோயில் நிர்வாகத்தில் புகார் செய்துள்ளனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோயில் உதவி ஆணையர் லட்சுமி, பக்தர்களிடம் பணம் வசுலித்தது யார் என கேள்வி எழுப்பினார்.
பக்தரிடம் பணம் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என எச்சரித்தார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் குமரேசன், தமிழ்செல்வன் ஆகிய 2 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.