கிரேனில் வந்த 15 அடி உயர சீர் மாலை; மாஸ் காட்டிய தாய்மாமன்! - தாய் மாமன்
திருவண்ணாமலை: காதணி விழாவிற்காக தாய்மாமன் ஒருவர் சீர் செய்வதக்காக கிரேன் மூலம் 15 அடி உயரத்தில் மாலை எடுத்துச் சென்று அசத்திய சம்பவம் வந்தவாசியில் பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காதணி விழா, சடங்கு, திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு தாய்மாமன் சீர் கொண்டு செல்லும் நிகழ்வு நமது பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நகர்புறங்களில் இந்த தாய்மாமன் சீர் வரிசை கொண்டு செல்லும் நிகழ்வு மறைந்தாலும், கிராமப்புறங்களில் இன்றளவிலும் இந்நிகழ்வு நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த புன்னை கிராமத்தைச் சேர்ந்த சாமி ஐயப்பன் என்பவர் காதணி விழாவிற்கு தாய்மாமன் சீர் கொண்டு செல்வதற்கு 15 அடி உயரத்தில் ராட்சச மாலை ஒன்று தயார் செய்துள்ளார். பின் அதனை கிரேன் மூலம் ஊர்வலமாக எடுத்துச் சென்று அசத்தினார்.
அது மட்டுமில்லாமல் மாட்டு வண்டிக்கு பதிலாக மாடலாக டிராக்டரில் குழந்தைகளை அமர வைத்து பல்வேறு வகையான சீர்வரிசைகளை ஊர்வலமாக எடுத்து சென்றனர். கிரேன் மூலம் எடுத்துச் சென்ற மாலையை சாலையில் செல்லும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.