Courtallam: குற்றாலம் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட 12 அடி நீள மலைப்பாம்பு! - குற்றாலம் துணிக்கடையில் புகுந்த பாம்பு
தென்காசி: தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று(ஜூலை 6) இரவு பெய்த தொடர் கனமழை காரணமாக குற்றால அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் மரக்கிளைகள், கற்கள் மற்றும் பல்வேறு மலைவாழ் உயிரினங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த நிலையில், வெள்ளப்பெருக்கில் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பு ஒன்று, குற்றாலம் கோயில் அருகே உள்ள ஒரு துணிக்கடைக்குள் புகுந்துள்ளது. கடைக்காரர் இன்று காலை கடையைத் திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, கடையிலிருந்து 'உஸ் உஸ்' என்று சத்தம் கேட்டுள்ளது.
இதனால் அச்சமடைந்த கடைக்காரர், துணிகளை எல்லாம் எடுத்து பார்த்தபோது அங்கு நீளமான மலைப்பாம்பு ஒன்று இருந்தது தெரியவந்தது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தென்காசி தீயணைப்பு துறையினர் மற்றும் குற்றாலம் வனத்துறையினர் கடைக்குள் பதுங்கி இருந்த சுமார் 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை மீட்டனர். அந்த ராட்சத மலைப்பாம்பை பார்ப்பதற்காக அப்பகுதி மக்கள் குவிந்தனர். பின்னர், வனத்துறையினர் மலைப்பாம்பை வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.
இதையும் படிங்க: வீட்டில் புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!