தமிழ்நாடு

tamil nadu

Etv Bharat

ETV Bharat / videos

வீடியோ: பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கோலாகலம் - Today Tanjavur News

By

Published : Mar 10, 2023, 3:43 PM IST

தஞ்சாவூர்:  தென்னகத்தின் திருப்பதி என்று போற்றப்படும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ பெருவிழா இன்று (மார்ச் 10) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயில் பகுதியில் அமைந்துள்ள வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தென்னக திருப்பதி, தமிழக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது. 

இத்தலத்தில் பெருமாள் ஒரே தாயாரான பூமிதேவியுடன் ஒரே சன்னிதியில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.  இத்தலம் திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியதாகும். இங்கு மூலவர் பெருமாளுக்கு உப்பு இன்றியே நிவேதனம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் வேறு எந்த வைணத் தலங்களிலும் இல்லாத வகையில் இங்கு மட்டுமே துலாபாரம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. 

இத்தகைய பெருமைக்குரிய தலத்தில் ஆண்டு தோறும் பங்குனி பிரமோற்சவம் 12 தினங்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டும் இவ்விழா உற்சவர் பெருமாள் பொன்னப்பர், பூமிதேவி தாயாருடன் கொடிமரம் அருகே எழுந்தருள, மூங்கில் கொடிமரத்தில், பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் இசைக்க, கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பின்னர் கொடிமரம் ஏற்றி வைக்கப்பட்டு, கொடிமரத்திற்கும், உற்சவர் பெருமாளுக்கும், தாயாருக்கும் தீபாராதனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கொடியேற்றத்தை தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி பிரகார உலா நடைபெறுகிறது. 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் நாளான வருகிற 18ம் தேதி சனிக்கிழமை திருவோணத்தன்று தங்கரதமும் அதனை தொடர்ந்து பகலிராப் பொய்கையில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. பின்னர் 12ம் நாளான 21ம் தேதி செவ்வாய் கிழமை மூலவர் சன்னதியில் நண்பகல் அன்னப்பெரும்படையலும் மாலை புஷ்பயாகமும், நடைபெற்று விடையாற்றி திருவீதியுலாவுடன் இவ்வாண்டிற்காண பங்குனி பிரமோற்சவம் பெருவிழா இனிதே நிறைவு பெறுகிறது. 

ABOUT THE AUTHOR

...view details