விஏஓ வீட்டில் 21 சவரன் நகைகள் கொள்ளை...கும்பகோணம் அருகே பரபரப்பு! - 10lakhs money theft
கும்பகோணம்:திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், ஓகை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் முத்துக்குமரன். இவர் தன் குடும்பத்தினருடன் நாச்சியார் கோவிலில் பகுதியில் உள்ள பாரதி நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். நாச்சியார் கோவில் அடுத்த லட்சுமி நகரில் இவர் புதிதாக வீடு கட்டி வரும் நிலையில், அடுத்த மாதம் புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.
புதுமனை புகுவிழாவின் பத்திரிகை எடுத்துக் கொண்டு, தனது குடும்பத்தினருடன் திருச்சி மணச்சநல்லூரில் உள்ள தனது குலதெய்வம் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தி விட்டு, உறவினர்களுக்கு பத்திரிக்கை வைத்து விட்டு நேற்றிரவு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் முன்பக்க கேட் மற்றும் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ந்து, உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் இருந்த சுமார் பத்து லட்ச ரூபாய் மதிப்புடைய 21 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் இச்சம்பவம் குறித்து நாச்சியார்கோவில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் பேரில், நாச்சியார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.