திருத்தணி முருகன் கோயிலில் ரூ.1 கோடியே 40 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்! - கோயில் நிர்வாகம்
Published : Jan 6, 2024, 10:20 AM IST
திருவள்ளூர்:திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5ஆம் படைவீடு ஆகும். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருவது வழக்கம்.
அப்படி வருகை தரும் பக்தர்கள் அனைவரும் மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, காணிக்கையாக உண்டியலில் பணம் மற்றும் நகைகளைச் செலுத்துவர். இதைத்தொடர்ந்து, கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள், உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படும்.
அதன்படி கார்த்திகை, மார்கழி உள்ளிட்ட மாதங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமான நிலையில், திருத்தணி கோயிலில் கடந்த 35 நாட்களாக பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்று (ஜன.5) எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை இடம் அனுமதி பெற்ற பின்பு, மலைக்கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் இப்பணி நடைபெற்றது. இதில் கோயில் பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
இதையடுத்து, உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில் ரொக்கமாக 1 கோடியே 40 லட்சத்து 11 ஆயிரத்து 93 ரூபாயும், தங்கம் 492 கிராமும், வெள்ளி 8 கிலோ 565 கிராமும், பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக கடந்த 35 நாட்களில் செலுத்தி உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.