பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்..! - பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்தவர் முனீர் என்பவர், வேலூர் மாவட்டம் கொணவட்டம் பொன்னியம்மன் கோயில் தெருவில் பழைய பிளாஸ்டிக் குடோன் வைத்துள்ளார். அங்கு, அரவை செய்வதற்காக ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகளை குடோனில் குவித்திருந்த நிலையில், இன்று (ஏப்.9) அதிகாலை சுமார் 2 மணிக்கு திடீரென பிளாஸ்டிக் குடோனில் தீப்பற்றி எரிய தொடங்கி மளமளவென எரியத்தொடங்கியது. இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் இயந்திரங்கள் உள்பட சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. குடோனில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இது தொடர்பாக வேலூர் வடக்கு காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், இந்த தீ விபத்தால் பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட புகை அப்பகுதி முழுவதும் நச்சுப்புகையாக பரவியதால் பொது மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST