கமலின் வேட்டையாடு விளையாடு ரீ ரிலீஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம்!
சென்னை:நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் ஆண்டவர் என புகழப்படுபவர். இவரது படங்கள் காலம் கடந்து ரசிக்கப் படுபவை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றதுடன் அதிக வசூல் செய்த படமாக மாறியது.
இந்த நிலையில் கடந்த 2006ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் வேட்டையாடு விளையாடு. இப்படத்தில் ஜோதிகா, கமாலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி , பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும், இத்திரைபடத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார்.
போலீஸ் கதையான இது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் மேக்கிங் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்துமே கொண்டாடப்பட்டன. இந்நிலையில் புதுப்பொலிவுடன் டிஜிட்டல் தரத்தில் தற்போது இப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் இப்படம் வெளியானபோது காலை காட்சி அரங்கு நிறைந்து காணப்பட்டது. ரசிகர்கள் புதிய படம் வெளியீடு போல திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். கமலின், விக்ரம் படத்திற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் மீண்டும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேட்டையாடு விளையாடு படத்தில் கமலின் சண்டைக் காட்சிகள் மிகவும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக அவரது அறிமுக காட்சியில் வரும் சண்டைக் காட்சி சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். “என் கண்ணு வேணும்னு கேட்டியாமே” என்று கமல் சொல்லும் வசனம் பிரபலமானது. அதேபோன்று “பார்த்த முதல் நாளே” பாடல், “மஞ்சள் வெயில் மழை” பாடல் , “கற்க கற்க” பாடல் என அனைத்து பாடல்களும் தற்போது வரை ட்ரெண்ட் ஆகதான் உள்ளது.
ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமாவில் சிறந்த ஒரு க்ரைம் த்ரில்லர் படமாக வேட்டையாடு விளையாடு அமைந்தது.
தற்போது அது மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியி மிகுந்த வரவேற்பைப் பெற்று வருவது கமல்ஹாசன் என்னும் படைப்பாளியின் வெற்றிக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க :மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி வழக்கு: உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?