"ஆஸ்கர் அங்கீகாரம்" - ஆர்ஆர்ஆர், தி எலிஃபேன்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவுக்கு வெங்கய்யா நாயுடு வாழ்த்து! - தி எலிஃபேன்ட் விஸ்பரர்ஸ்
சென்னை: 'நாட்டு நாட்டு' பாடல் மற்றும் 'தி எலிஃபேன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணக் குறும்படம், ஆஸ்கர் விருதை வென்றுள்ள நிலையில், ஆர்ஆர்ஆர் மற்றும் தி எலிஃபேன்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருக்கு, இந்திய முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் கீ.ரா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது நூறு கட்டுரைகள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வெங்கய்யா நாயுடு ஆஸ்கர் விருது வென்ற படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆர்ஆர்ஆர் படத்தின் தயாரிப்பாளர், நடிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும், ஆஸ்கர் விருது வென்ற படைப்புகள் விருதுக்கு மிகவும் தகுதியானவை என்றும் தெரிவித்தார். இந்திய படைப்புகளுக்கு ஆஸ்கர் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது மிகப்பெரிய அங்கீகாரம் என்றும் தெரிவித்தார்.
ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வெற்றித்திரைப்படமான ஆர்ஆர்ஆர்-ல் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல், 'சிறந்த ஒரிஜினல் பாடல்' என்ற பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. அதேபோல், ஆவணக் குறும்படப் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த 'தி எலிஃபேன்ட் விஸ்பரர்ஸ்' குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இப்படம் யானைக் கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டி யானையை முதுமலையைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி என்ற பழங்குடியின தம்பதி பராமரிப்பதை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழக்கும் விழாவில் நாட்டு நாட்டு பாடலுக்கான ஆஸ்கர் விருதை இசையமைப்பாளர் கீரவாணி, பாடல் ஆசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.