வரும் 19ம் தேதி மலர்க் கண்காட்சி தொடக்கம் - முழுவீச்சில் தயாராகும் உதகைப் பூங்கா! - உதகை மலர்க்கண்காட்சி 19ல் தொடக்கம்
உதகை:நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 125-வது மலர்க் கண்காட்சி வரும் 19ம் தேதி தொடங்கி, 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பூங்காவில் 35,000 மலர்த் தொட்டிகளில் டேலியா, மேரி கோல்டு, பிகோனியா, ஜெரேனியம், சைக்லமன், சினரேரியா, கிலக்ஸ்சீனியா, ரெணுன்குலஸ் உள்ளிட்ட 325 வகையான ரகங்களில் 5.5 லட்சம் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
கண்காட்சியின் சிறப்பம்சமாக பூங்காவில் அமைந்துள்ள இத்தாலியன் பூங்காவில் சுமார் 10,000 வகையான வண்ண மலர்த்தொட்டிகளில் காண்பதற்கு குளிர்ச்சி தரும் வகையில், பல வடிவங்களில் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை பொதுமக்களின் கண்களுக்கு விருந்தாக படைக்கும் வகையில் மலர்த் தொட்டிகளை மாடங்களில் அடுக்கி வைக்கும் பணியை, தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார் .
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும் போது, "நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெறும் கோடை விழாவினை லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மே 13ம் தேதி முதல் 25ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தின் இயற்கை காட்சிகளை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் முதல்முறையாக இரண்டு தனியார் நிறுவனங்கள் மூலம் 2 ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் வெற்றி அடைந்தால், இனி வரும் கோடை விழாக்களின் போது ஹெலிகாப்டர் சேவை தொடரும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் நகை திருட்டு: இருவர் கைது!