Theni: குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது ஆடித்திருவிழா - saniswarar
தேனி: சின்னமனூர் அருகே குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் சுயம்புவாய் சனீஸ்வரன், தனிப்பெரும் கோயிலில் பக்கர்களுக்கு அருள்பாலிக்கும் ஒரே இடமாக குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் அமைந்துள்ளது. இது ஒரே ஸ்தலம் என்பதால் மிகவும் பிரசித்திபெற்று விளங்குகிறது.
இத்திருக்கோயிலில் வருடந்தோறும் ஆடி மாத சனிக்கிழமைகளில் ஆடிப்பெருந்திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி இறை வழிபாடு செய்வது வழக்கம்.
இந்நிலையில் இந்த வருட ஆடிப்பெருந்திருவிழாவை இன்று (ஜூலை 22) கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கினார்கள். விழாவின் சிறப்பாக கலிப்பனம் கழித்து சுத்த நீர் ஊற்றி, சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளை செய்து நீல வர்ண கொடியை சிவாச்சாரியர்கள் ஏற்றிவைத்தனர்.
விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுரபி நதியில், புனித நீராடி எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ததுடன் உப்பு பொறியுடன், சனீஸ்வர பகவானின் வாகனமாக கருதப்படும் மண் காகத்தினை வைத்து தலையைச் சுற்றி பீடத்தில் வைத்து தங்களது தோஷங்களை நிவர்த்தி செய்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம், நான்காம் தேதி வெள்ளிக்கிழமை திருக்கல்யாண சுப நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.