Marimuthu demise: மறைந்த நடிகர் மாரிமுத்துவை அரிசியால் வரைந்து அஞ்சலி செலுத்திய ஓவியர்!
Published : Sep 9, 2023, 6:36 PM IST
திருவண்ணாமலை:இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து நேற்று (செப்டம்பர் 8ஆம் தேதி) காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். விக்ரம், ஜெயிலர் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ள மாரிமுத்து எதிர்நீச்சல் தொடர் மூலம் பிரபலமடைந்தார். நேற்று காலை நடிகர் மாரிமுத்து எதிர்நீச்சல் தொடரின் டப்பிங் பணிகளில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தானாகவே காரை ஓட்டி கொண்டு மருத்துவமனை சென்ற நிலையில் உயிரிழந்தார். மாரிமுத்து திடீர் மறைவு திரைத்துறையினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் திரைத்துறையினர் பல பேர் நேற்று அஞ்சலி செலுத்தினர். மாரிமுத்துவின் உடல் இன்று தேனி மாவட்டத்தில் உள்ள பசுமலைத்தேரி கிராமத்தில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு அவரது உடலுக்கு உறவினர்களும், ஊர் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நடிகர் மாரிமுத்துவின் உடல் தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள மாரிமுத்துவின் ரசிகரான ஓவியர் ஹரிஷ்பாபு மறைந்த மாரிமுத்துவின் படத்தை அரிசியால் வரைந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.