தமிழில் பதவியேற்ற விஜய் வசந்த்! - காமராஜர்
கன்னியாகுமரி எம்.பி., விஜய் வசந்த் நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 19)பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது அவர், “கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசந்தகுமாரின் மகனான விஜயகுமார் என்ற விஜய் வசந்த் என்னும் நான் சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பில் உண்மையான நம்பிக்கையும் பற்றுதலும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ள இருக்கும் கடைமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் கடவுள் அறிய உறுதிகூறுகிறேன். பெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க.. ராஜிவ் காந்தி புகழ் வாழ்க.. நன்றி” என தமிழில் கூறினார். விஜய் வசந்த் தனது தந்தை (மறைந்த எம்பி வசந்தகுமார்) வழியில் பெருந்தலைவர் காமராஜர் மற்றும் ராஜிவ் காந்தியை நினைவு கூர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார். முன்னதாக விஜய் வசந்த் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.