டெல்லி: கரோனா சிகிச்சைக்குப் பயன்படும் ரெம்டெசிவிர் மருந்தை 'ரெம்டாக்’ எனும் பெயரில் சைடஸ் கேடில்லா என்னும் மருந்து நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மருந்தின் 100 மில்லி கிராம் விலை ரூ.2800 என சந்தையில் சைடஸ் கேடில்லா மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரெம்டெசிவிர் மருந்தின் குறைந்த விலை பிராண்டாக 'ரெம்டாக்' இருக்கும் என கேடில்லா ஹெல்த்கேர் நிர்வாக இயக்குநர் ஷார்வில் படேல் தெரிவித்துள்ளார்.
ரெம்டெசிவிர்உரிமத்தை வைத்திருக்கும் கிலியட் சயின்ஸ் இன்க்., நிறுவனத்திடம் இருந்து இந்திய உரிமையைப் பெற்று சைடஸ் கேடில்லா நிறுவனம் 'ரெம்டாக்' மருந்தை வெளியிட்டுள்ளது. அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இந்த மருந்து கிடைப்பதற்கான அனைத்து வழிகளையும் சிறப்பாக செய்திருப்பதாக , அந்நிறுவனம் கூறியிருக்கிறது.
கண்காணிப்புக்காக கிட்டத்தட்ட 3 லட்சம் கோவிட் கவாச் எலிசா கண்டறியும் சோதனைக் கருவிகள், இதற்காக வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் பிளாஸ்மிட் டி.என்.ஏ தடுப்பூசி ZyCov-D இப்போது தகவமைப்பில் ஒன்றாம் கட்டத்திலும், மருத்துவப் பரிசோதனைகளின் இரண்டாம் கட்டத்திலும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.