ஹைதராபாத்: தூக்கம் என்பது வாழ்க்கையின் அடிப்படை உள்ளுணர்வு என்று விவரிக்கிறது ஆயுர்வேதம். இந்த தூக்கம் அனைத்து உயிரினங்களுக்கும் மிக அவசியமானது என்றும் மகிழ்ச்சி-மகிழ்ச்சியின்மை, ஊட்டச்சத்து-ஊட்டச்சத்து குறைபாடு, வலிமை-பலவீனம், ஆற்றல்-ஆற்றலின்மை, அறிவு-அறியாமை, ஆயுட்காலம்-உயிரிழப்பு உள்ளிட்ட அனைத்துடனும் தொடப்புடையது என்றும் கூறுகிறது.
தூக்கத்தை புரிந்து கொள்ளுதல்: ஆயுர்வேதத்தை பொறுத்தவரையில், மனித ஆரோக்கியத்துக்கு அஹாரா (உணவு), பிரம்மச்சார்யா (நடத்தை), நித்ரா (தூக்கம்) ஆகிய மூன்றும் மிக முக்கியமானது. ஆரோக்கியமான நல்வாழ்வுக்கு முறையான தூக்கம் மிகவும் அவசியம். நமது உடலில் ஏற்படும், நோய்களையும், மாற்றங்களையும் எதிர்த்து போராட நீண்ட வலுவான சக்தியை தூக்கம் வழங்குகிறது. இது மனம்-உடல்-செயல்பாடு-ஆன்மா உடனான பிணைப்பை மேம்படுத்த தூக்கம் வழி வகுக்கிறது. அந்த வகையில், செரிமானம், உறுப்புகள் செயல்பாடு, மன அழுத்தம், உடல் வலி உள்ளிட்டவையை சமநிலை உடன் வைத்திருக்க உதவுகிறது.
இவை அனைத்தும் திறம்பட செயல்பட பக்கபலமாக இருக்கிறது. மக்கள் ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை அறிந்ததைப் போல, தூக்கத்தின் முக்கியத்துவத்தையும் அறிய வேண்டும். சுவாசப் பயிற்சி, சீரான இடைவெளியில் உணவு உண்ணுதல், குறிப்பிட்ட நேரத்தில் உறங்க செல்லுதல் வேண்டும். குறிப்பாக, இடது பக்கத்தில் செரிமானம் சுழற்சி மற்றும் இதய செயல்பாடுகள் நடப்பதால் இடது பக்கமாக தூங்குவது நல்லது. நீண்ட உடல் உழைப்புக்கு பின் உடனடியாக தூங்குவது குறட்டைக்கு வழிவகுக்கும்.
இது உங்களுக்கு சீரான ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்பதை குறிக்கிறது. இதை எதிர்கொள்ள, ஆயுர்வேத்தின் அபியங்கா (எண்ணெய் மசாஜ்), பாதப்யங்கா (கால் மசாஜ்) மற்றும் நாஸ்ய கர்மா (மூக்கில் எண்ணெய் விட்டு சுத்தப்படுத்துதல்) ஆகியவற்றை பின்பற்றலாம். அதேபோல, நன்கு காற்றோட்டமான இடத்தில் தலைக்கு பொருத்தமான தலையணை உடன் வடக்கு திசையை தவிர்த்து படுப்பது நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கும்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள போதுமான உடற்பயிற்சி மற்றும் உணவு, மாலை அல்லது இரவில் மென்மையான இசையைக் கேட்பது தூக்கத்துக்கு உங்களை தயார்ப்படுத்தும். மனதையும் உடலையும் சாந்தப்படுத்த தூக்கத்திற்கு உகந்த சூழலை உருவாக்குவது அடிப்படையான காரணியாகும். முக்கியமாக, நரம்பு மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளைத் தவிர்க்க வேண்டும். இந்த கதிர்வீச்சுகள் உங்களது செல்போன், லேப்-டாப், டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக் கேஜெட்களில் இருந்து வருகிறது.
ஆகவே, தூங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பே அவற்றை ஒதுக்கி வைக்க வேண்டும். நீங்கள் தூங்கும் இடத்தை குளிர்ச்சியாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். நாள்தோறும் ஒரே நேரத்தில் இரவில் படுப்பதையும், காலையில் எழுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே போல இரவு உணவுக்கான நேரமும், காலை உணவுக்கான நேரமும் குறிப்பிட்ட மணி நேரத்தில் இருக்க வேண்டும். இவ்வாறு, தூக்கம் என்பதை ஒரு சடங்கை போல பின்பற்ற வேண்டும். இது நீண்ட ஆயுள், ஆரோக்கியம், மன அமைதிக்கு வழிவகுக்கும். ஆகவே, தூக்கத்தை விலைமதிப்பற்ற செல்வங்களில் ஒன்றாக கருதி பின்பற்ற வேண்டும் என்று விளக்குகிறது ஆயுர்வேதம்.
இதையும் படிங்க:கர்ப்பிணிகள் செல்போன் பார்த்தால் சுகர் வருமா? - மருத்துவர்களின் விளக்கம்