இந்தியாவில் பாலியல் சுகாதாரம் குறித்து வெளிப்படையாகப் பேசுவது இன்னமும் பெரும்பாலான குடும்பங்களில் சாத்தியப்படவில்லை. சிலர் இதனை அவமானமாகக் கருதுகின்றனர். சில குடும்பங்களில் இது குறித்து சந்தேகங்களைத் தீர்ப்பதற்குப் பதிலாக இந்த டாபிக்கை பேசுவதை தவறு என முற்றுப்புள்ளி வைத்துவிடுகின்றனர்.
ஆனால், இன்றைய தலைமுறையினர் அது குறித்த தேடலையும், வெளிப்படையாக உரையாடும் மனநிலையையும் கொண்டுள்ளனர். இதற்கு டிஜிட்டல் / சமூக வலைதளங்கள் அவர்களுக்கு உதவி செய்கின்றன.
இந்நிலையில், பாலியல் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாகவும் பால்வினை நோய்ப்பரவல் உள்ளிட்டவற்றைத் தடுக்கும் நோக்கிலும் செப்டம்பர் 4ஆம் தேதி சர்வதேச பாலியல் சுகாதார தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
பால்வினை தொற்று நோய்கள் உலக அளவில் உள்ள பொது சுகாதாரத்தின் சவால்கள். இது தனிமனிதனின் உடல், மனம், சமூக நிலையைப் பொறுத்தது மட்டுமல்ல; சில நேரங்களில் பிறருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆகவே இது குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
நேர்மறையான, மரியாதைக்குரிய அணுகுமுறை பாலியல் சுகாதாரத்தில் தேவைப்படுவதாக உலக சுகாதார அமைப்புதெரிவிக்கிறது. குறிப்பாக வற்புறுத்தல் இல்லாத, பாதுகாப்பான, மகிழ்ச்சியான பாலியல் அனுபவங்களும் இதில் முக்கியமாகக் கருதப்படுகிறது. தனிநபர்கள், குடும்பங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் நாடுகளின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையானது.
பாலியல் ரீதியாகப் பரவும் தொற்று
மக்கள் பாலியல் ரீதியிலான விருப்பங்களைக் கொண்டிருந்தாலும், பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுவது அவசியம் எனப் புரிந்துகொண்டு அதற்கே முன்னுரிமைக் கொடுக்க வேண்டும். உங்கள் இணையருடன் உடலுறவு கொள்ளும்போது பாலியல் ரீதியான சில தொற்று நோய்கள் (STIs) பரவவும் வாய்ப்புள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் ஒவ்வொரு நாளும் 1 மில்லியனுக்கும் அதிகமான பாலியல் நோய்த்தொற்றுகள் (எஸ்.டி.ஐ.) ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவிக் கொண்டிருக்கின்றன.
”சுமாராக 30-க்கும் மேற்பட்ட வெவ்வேறு பாக்டீரியாக்கள், வைரஸ்கள் (தீநுண்மி), ஒட்டுண்ணிகள் உடலுறவு கொள்ளும்போதும், பாலியல்ரீதியாகத் தொடர்பில் இருக்கும்போதும் பரவுகின்றன. இதில், எட்டு நோய்க்கிருமிகளினால் பரவும் நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்” என்கிறது உலக சுகாதார அமைப்பு
குணப்படுத்தக் கூடியவை: சிபிலிஸ், கோனேரியா, கிளமிடியா, ட்ரைக்கோமோனியாசிஸ்
குணப்படுத்த முடியாதவை: ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ், ஹெபடைடிஸ் பி, எச்.ஐ.வி., மனித பாப்பிலோமா வைரஸ் (எச்.பி.வி).
குணப்படுத்தமுடியாத நோய்களைப் பொறுத்தவரை நாம் வீரியத்தை மட்டுமே குறைக்க முடியும்.
இதுபோன்ற பால்வினை நோய்கள் பாதுகாப்பற்ற முறையில் உறவு வைத்துக் கொள்ளும்போதுதான் பரவுகின்றன. தவிர, பாதுகாப்பற்ற உடலுறவால் தேவையற்ற கர்ப்பமாகவும் வாய்ப்புள்ளது.
சில டிப்ஸ்
- குறிப்பிட்ட நபர்களுடன் மட்டும் உறவு வைத்துக்கொள்வதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
- நீங்கள் உறவு வைத்துக்கொள்ளும் நபருக்கு நேர்மையாக இருங்கள்; அவர்களிடம் உங்களது முந்தைய உறவு குறித்து முன்னமே தெரிவித்துவிடுங்கள்.
- நீங்கள் உறவு கொள்ளவிருக்கும் நபரை சோதித்து அறிவதற்கு தயக்கம் காட்டாதீர்கள்.
- ஹெபடைடிஸ் பி (Hepatitis B), மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.
- உடலுறவு வைத்துக்கொள்ளவதற்கு முன்னதாக ஆணுறைகளையும், பெண்ணுறைகளையும் பயன்படுத்தத் தயங்காதீர்கள். இந்த தயாரிப்புகளைப் பயன்படுத்தும் முன்னர் கவனமாக லேபிள்களைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
- நீங்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராக இருக்கும்பட்சத்தில் உறவு வைத்துக்கொள்ளுங்கள்.
- ஒருவேளை நீங்கள் செக்ஸ் சாதனங்களைப் பயன்படுத்தும்பட்சத்தில் அதனைத் தூய்மையாக்கிப் பயன்படுத்துங்கள்.
இதையும் படிங்க:தினமும் உடலுறவு கொள்வதால் இத்தனை நன்மைகளா!