உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று (மே 31) கடைபிடிக்கப்படுகிறது. புகையிலைப் பயன்படுத்துவதால் புற்றுநோய், இதய நோய், நுரையீரல் ஆகியவை சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்தும் என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் இறப்பு மற்றும் அதிகப்படியான நோய்களுக்கான முக்கிய காரணங்களில் புகையிலை பயன்பாடும் ஒன்றாகும்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1.35 மில்லியன் இறப்புகள் புகையிலைப் பயன்படுத்துவதால் ஏற்படுகின்றன. அதிலும், இந்தியா புகையிலைப் பயன்பாடு மற்றும் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஏனென்றால், இந்தியாவில் பல்வேறு வகையான புகையிலைப்பொருட்கள் மிகக்குறைந்த விலையில் கிடைக்கின்றன. இந்தியாவில் புகையிலையின் வடிவம் பல்வேறு விதங்களில் உள்ளது.
ஏஎம்டி பாதிப்பு: குறிப்பாக, புகையற்ற புகையிலை மற்றும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களான கைனி, குட்கா, புகையிலை, ஜர்தாவுடன் வெற்றிலை க்விட், பீடி, சிகரெட் மற்றும் ஹூக்கா ஆகியவை இருக்கின்றன. இந்நிலையில், புகையிலைப் பயன்படுத்துவதால் பார்வை இழப்பும் ஏற்படுகிறது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
குளோபல் அடல்ட் டொபாக்கோ சர்வே இந்தியாவின் படி, இந்தியாவில் கிட்டத்தட்ட 267 மில்லியன் வயது வந்தோர்கள் புகையிலையைப் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. மேலும், ’மக்குலா’ எனப்படும் மத்திய பார்வையும் சிதைவுபடும். புகைப்பிடிப்பவர்கள், புகைப்பிடிக்காதவர்களை விட ‘வயது தொடர்பான மாகுலர் டிஜெனரேஷன் (AMD)’ என்ற நோயினை உருவாக்குவதாகவும் ஆராய்ச்சியின் முடிவில் தெரிய வந்துள்ளது. ஏஎம்டி என்பது ஒரு நபரின் மையப் பார்வையை மங்கச் செய்யும் ஒரு கண் நோயாகும்.
பார்வை இழப்பு: இதுகுறித்து மும்பை விழித்திரை மையத்தின் விட்ரோ-ரெட்டினல் அறுவை சிகிச்சை சிஇஓ அஜய் டுடானி கூறுகையில், "புகைப்பிடிப்பதால் கண்களில் எரிச்சல் உண்டாகும். ஏஎம்டி, கண்புரை மற்றும் கிளகோமா ஆகிய மூன்று கண் நோய்கள் உருவாகி, கண்களை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளிவிடும் அபாயம் உள்ளது. ஏஎம்டி நோயாளிகள் மத்தியில் ஆக்ஸிஜனேற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாக்குலாவில் இருந்து லுடீன் குறைவதால் 10 ஆண்டுகளுக்கு முன்பே ஏஎம்டி வளர்ச்சி உருவாகிவிடும்" எனக் கூறினார்.
தொடர்ந்து ASG கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும் ஆலோசகருமான டாக்டர் கணேஷ் பிள்ளை கூறுகையில், "புகைப்பிடித்தல் உங்கள் உடலின் மற்ற பகுதிகளைப் போலவே, உங்கள் கண்பார்வைக்கு தீங்கு விளைவிக்கும். பல சந்தர்ப்பங்களில் இதற்கான தகுந்த சிகிச்சையை அதற்கான சரியான நேரத்தில் கொடுக்காவிட்டால், மிகப்பெரிய கண் பார்வை இழப்பிற்கு இது வழிவகுக்கும்” எனத் தெரிவித்தார்.