கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், குடும்ப வாழ்க்கை, அலுவலக வாழ்க்கை என இரண்டையும் சமநிலையாகப் பேணிகாத்த பெண்களுக்கு நாம் நன்றிக்கடன்பட்டுள்ளோம். இது சம்பந்தமாக நமது ஈடிவி பாரத் குழுவினர் சில பெண் மருத்துவர்களைச் சந்தித்துப் பேசினர்.
இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரை பெண்கள் கடந்துவந்த பாதை மிகப்பெரிது. பல காலமாய் ஆணாதிக்கத்தைப் போதித்துவந்த சமூகம் இப்போது பெண்களுக்குச் சம உரிமை வழங்கவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் தனது வலுவான குரலை எழுப்பத் தொடங்கியுள்ளது.
இது குறித்து, ஹைதராபாத்தின் ஏ.எம்.டி. ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் மருத்துவர் ராஜலட்சுமி மாதவம் கூறுகையில், "ஒரு ஆயுர்வேத மருத்துவர் என்கிற முறையில், நான் ஆன்லைன் ஆலோசனையில் ஈடுபட்டேன். அப்போது பல சவால்களை எதிர்கொண்டேன்.
ஏனென்றால் எங்களால் நாடித்துடிப்பு, படபடப்பு போன்றவற்றை பரிசோதிக்க முடியவில்லை. இதன் காரணமாக சிகிச்சை மேற்கொள்ள சிரமமாக இருந்தது. மருந்துகள் கிடைக்காதது, நோய்களுக்கு பஞ்சகர்மா சிகிச்சை செய்ய முடியாதது எங்களது சிகிச்சைக்கு சவால்களை உருவாக்கின.
தொற்று காலத்தில் மனநலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தொலைபேசி, ஆன்லைனில் ஆலோசனைகள் மேற்கொண்டதால் எங்கள் உளவியலாளர்களும், மனநல மருத்துவர்களும் பல சிரமங்களை எதிர்கொண்டனர்” என்றார்.
மருத்துவ உளவியலாளர் வீணா கிருஷ்ணன் கூறுகையில், "அந்தச் சூழலில் மருந்துகள் கிடைக்காமல் போனதால் நோயாளிகள் பலருக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ளாதபோது ஏற்படும் அறிகுறிகள் காணப்பட்டன. ஆரம்பத்தில் எல்லா பிரச்சினைகளையும் சமாளிப்பது கடினமாக இருந்தது. காலப்போக்கில் எங்களால் அதைச் சமாளிக்க முடிந்தது.
நேரில் பரிசோதனை செய்து பார்த்ததில் நோயாளிக்கு என்ன பிரச்சினை என்பது தெரிந்தது. கரோனா தொற்று காலத்தில் ஆன்லைனில் நோயாளிகளைச் சந்தித்ததால் எங்களால் நோயாளிகளுக்கு என்ன பிரச்சினை என ஊகிக்க முடியவில்லை. எனினும் எனது கடந்த கால அனுபவத்தின் மூலம் நோயாளிகளைத் தேற்ற முடிந்தது" எனத் தெரிவித்தார்.
டேராடூனில் குழந்தைகள் நல மூத்தமருத்துவராகப் பணிபுரியும் மருத்துவர் லத்திகா ஜோஷியோடு பேசினோம். அவர், "மருத்துவமனைகளில், முறையான சுகாதாரம் பின்பற்றப்படுவதைப் குறித்து நாங்கள் வெகுவாக கவலைப்பட்டோம்.
மருத்துவமனையில் குழந்தையை அனுமதிக்கும் முன் அந்தக் குழந்தையால் மற்ற குழந்தைகளுக்குத் தொற்று ஏற்படாத வகையில் உறுதிசெய்ய வேண்டும். ஆரம்பத்தில் மிகக் கடுமையாகத்தான் இருந்தது. அதனால் மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டது. அதன் பிறகு தொற்று குறித்த பலவற்றைத் தெரிந்துகொண்டோம் " என்று கூறினார்.
இதன்மூலம் பெண்களும் தொற்று காலத்தில் அதிகம் உழைத்திருப்பதைத் தெரிந்துகொண்டோம். பெண்கள் அதிகாரம் கொண்ட ஆண்களுக்கு இணையாக உள்ள ஒரு சமூகமாக இந்தியா வளர்ச்சிபெற்றுவரும் நிலையில் நாம் அவர்களை நினைத்துப் பெருமைப்பட வேண்டும்.
இதையும் படிங்க:கரோனாவுக்கு அப்புறமும் நீண்ட ஆயுசு வேணுமா? - இனி இதைச் சாப்பிடுங்க!