ஹைதராபாத்: இந்த நூற்றாண்டை பொருத்தவரை பெண்களுக்கான சுதந்திரம், வேலை வாய்ப்பு, சமூகத்தில் முக்கியத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைத்தபோதிலும் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை என அமெரிக்க உளவியல் சங்கம் நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. முன்பை விட பெண்கள் அதீத பதட்டம், மனச்சோர்வு, கோபம், தனிமை மற்றும் அமைதியற்ற உறக்கம் உள்ளிட்ட பல மனநல சவால்களை எதிர்கொள்வதாக அந்த ஆய்வு முடிவு குறிப்பிட்டுள்ளது.
உலக அளவில் வெவ்வேறு வயதுடைய பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சமூகம் தங்களை எவ்வாறு வழிநடத்துகிறது என்பதில் பலரும் கவலை கொள்வதாக தெரியவந்துள்ளது. ஆனால் பெண்கள் தங்கள் வாழ்கையில் உயரிய குறிக்கோளுடன் இருப்பதாலும், பிறருக்கான அர்த்தமுள்ள வாழ்வை வாழ்வதாலும் அதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சிக்கொள்கின்றனர் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பெண்கள் தங்கள் வீடுகளில் இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியோரை பராமரிக்க வேண்டும், வேலை இடங்களில் இருக்கும் சுமைகளை சமாளிக்க வேண்டும், குடும்பத்தின் நிர்வாக பொருப்புகளை கையாள வேண்டும் உள்ளிட்ட பல சவால்களை சமாளிக்கின்றனர்.
அது மட்டும் இன்றி உலக அளவில் பணஇயிடத்தில் ஐந்தில் மூன்று பெண்கள் கொடுமைபடுத்தப்படுதல், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுதல் வாய்மோழி துஷ்பிரயோகத்தை அனுபவித்தல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
அதே நேரம் பெண்கள், வேலை, வீடு மற்றும் பொருப்புக்களை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளும் நிலையில் தங்களுக்கான முக்கியத்துவம் வழங்குவதில் கோட்டை விடுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது பெண்கள் அதீத உணர்ச்சி பூர்வமான சிந்தனைகளுக்கு உட்பட்டவர்கள் என்பதை குறிக்கிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஆண்களை விட பெண்கள் மற்றவர்களிடம் நல்ல உறவை வளர்த்துக்கொள்ள முயற்சிப்பதாகவும், தங்கள் தனிப்பட்ட வளர்ச்சி திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். மேலும் இதன் அடிப்படையில் மற்றவர்களின் உதவியை நாடும்போது அவர்கள் உடனடியாக பல்வேறு துன்பங்களையும் எதிர்கொள்கிறார்கள் என தெரியவந்துள்ளது.
மேலும் பெண்கள் சமூக ரீதியான தொடர்புகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில், பெண்களின் நட்பு பிறரோடு மிகவும் நெருக்கமானதாக இருக்கிறது எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அது மட்டும் இன்றி பெண்கள் நேருக்கு நேர் அமர்ந்து தங்களுக்கான நேரம் ஒதுக்கி பேசுவதை அதிகம் விரும்புவதாகவும் ஆண்கள் அப்படி இல்லை என்றும் கூறப்படுகிறது. இது பெண்களின் மன ஆரோக்கியத்தை கேள்விக்குறி ஆக்குவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பெண்களின் மகிழ்ச்சிக்கான காரணம்;பெண்கள் பல்வேறு சூழல்களால் கவலையுற்றாலும் வாழ்கையில் அதீத நோக்கத்தோடு இருப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. வாழ்கையில் அர்த்தமும், நோக்கமும் கொண்டிருப்பதால் அது அவர்களின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட கால வாழ்வை உறுதி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டும் இன்றி மற்றவர்களுக்காக வாழ்வது, தொண்டாற்றுவது போன்ற விஷயங்களில் அவர்கள் மகிழ்ச்சிபெறுவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு, பெண்கள் தங்கள் நல்வாழ்வைக் காக்க நேரம் ஒதுக்க வேண்டும் எனக்கூறும் ஆய்வாளர்கள் இதைச் செய்ய வழிமுறைகளையும் கூறுகிறார்கள்;
உங்களுக்கான இடத்தை தேர்வு செய்யுங்கள்;சமூகத்தில் உங்களுக்கான ஒரு இடத்தை தேர்வு செய்யுகள் அது ஒரு நண்பர்கள் குழுவாக இருக்கலாம், கலைக்கூடமாக இருக்கலாம், விளையாட்டு, உடற்பயிற்சி மேற்கொள்ளும் இடம்..இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அங்கு உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள். ஒருவருக்கொருவர் பல விஷயங்களை பகிர்ந்துகொள்ளும்போது மன அமைதி பெறலாம்.
இயற்கையோடு இணைந்திருங்கள்;பெண் என்றாலே இயற்கைதான். தாய் பூமி பெண் என்பார்கள். பெண்களுக்கும் இயற்கைக்கும் இடையே அவ்வளவு ஒற்றுமை உண்டு. ஆதலால் உங்கள் வாராந்திர திட்டத்தில் இயற்கையோடு ஒத்துப்போகும் வகையில் நேரத்தை செலவிடுங்கள். கடற்கரையில் நடப்பது, பூங்காவில் அமர்ந்து புத்தகம் படிப்பது, காடுகளில் அலைந்து திரிந்து மகிழ்வது மகிழ்ச்சி தரும்.
போதைக்கு அடிமையாவதை தவிருங்கள்;ஆண்களை விட பெண்கள் விரைவாக போதைக்கு அடிமையாவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதீத பதட்டம் காரணமாக இத்தகைய செயல்களில் பெண்கள் ஈடுபடுவதால் புற்று நோய், இருதய நோய் உள்ளிட்ட பல உடல்நல உபாதைகளை எதிர்கொள்கின்றனர்.
இதையும் படிங்க:உலக தேங்காய் தினம்: தேங்காயை இப்படித்தான் பயன்படுத்த வேண்டுமா?