சென்னை: தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல, தை பிறந்தவுடன் பொங்கல் பண்டிகையை வரவேற்கக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயத்தமாகிவிடுவார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாகத் தென் பகுதிகளில் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை தைத் திருநாள் என்றும் மற்ற இடங்களில் மகர சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தைத் துவக்குவதால், இது விதை விதைப்பதற்கான காலமாகவும், ஏற்கனவே பயிரிட்ட நெற்களை அறுவடை செய்வதற்கு உகந்த காலமாகக் கருதப்படுகிறது.
அதனால் பொங்கல் தினம் அறுவடை தினமாகவும், உழவர்களுடைய பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் உன்னத நாளாகவும், சூரிய பகவானுக்கு நன்றியைத் தெரிவிக்கும் தினமாகவும் பாவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை எந்த நேரத்தில் பிறக்கிறது, தை மாதம் பிறக்கும் நேரத்தில் தான் பொங்கல் வைக்க வேண்டுமா போன்ற உங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் தேச மங்கையர்க்கரசி.
பொங்கலை இரண்டு விதமாக, அதாவது ஒன்று சூரியப் பொங்கல் மற்றொன்று நல்ல நேரம் பார்த்துப் பொங்கல் வைப்பது என பிரிக்கப்படுகிறது. தைத் திருநாளன்று அதிகாலை சூரியன் உதயமாவதுக்கு முன்பு பொங்கல் செய்து படைப்பது சூரியப் பொங்கல் என கூறப்படுகிறது. மற்றொன்று குடும்பத்தில் அனைவரும் ஒன்றுகூடி நல்ல நேரம் பார்த்துப் பொங்கல் வைப்பதாகும் என கூறுகிறார் மங்கையர்க்கரசி.
தை பிறக்கும் நேரம்: 15ம் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5.45 மணி
சூரிய பொங்கல் வைக்கும் நேரம்:15ம் தேதி அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை