லக்னோ:பெர்தெஸ் நோய் பற்றி தெரியுமா?... பெர்தெஸ் யாரை பாதிக்கும் தெரியுமா?.. இதைப்பற்றி பார்ப்போம்.
பெர்தெஸ் நோய் என்றால் என்ன:பெர்தெஸ் நோய் என்பது இடுப்பு மூட்டை பாதிக்கும் ஒரு அரிய நோயாகும். இந்த நோய் 3 வயது முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகமாக பாதிக்கின்றது. தொடை எலும்பின் தலை பகுதியில் பந்து வடிவ மூட்டு இருக்கும். இந்த இடுப்பு மூட்டிற்கு போதுமான அளவு இரத்தம் செல்லாத போது, எலும்பு செல்கள் இறக்கின்றன. இதனால் இடுப்பு மூட்டு மோசமடைந்து, நாளடைவில் பெர்தெஸ் நோய் ஏற்படுகிறது.
POSUPCON-2023 ராம் மனோகர் லோகியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (RMLIMS) சார்பில், குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியம் குறித்து மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், பெர்தெஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்க தாமதமாகும் பட்சத்தில், அறுவை சிகிச்சை செய்யப்படும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கொல்கத்தா குழந்தைகள் நல மருத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர் அபிஷேக் சாஹா, மூன்று முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விளையாடும் போது காயமடைகிறார்கள். பெற்றோர்கள் அதை அலட்சியமாக விடுகின்றனர். இதன் விளைவாக இடுப்பு மூட்டிற்கு செல்லும் இரத்தம் தடைப்பட்டு, எலும்பு செல்கள் இறக்கின்றன. அதன் பின்னரே பெற்றோர்கள் எலும்பு நிபுணர்களை நாடுகின்றனர். இந்தக் கட்டத்தில் அறுவை சிகிச்சை தான் ஒரே வழி. இந்த வயதில் அறுவை சிகிச்சை என்பது மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஒவ்வொரு மாதமும் 15 முதல் 20 பெர்தெஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்க்கிறோம்” என்றார்.
பெற்றோர்கள் கவனத்திற்கு:ராம் மனோகர் லோகியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (RMLIMS) இன் குழந்தை எலும்பியல் துறையைச் சேர்ந்த மருத்துவர் பிரபாத், இந்த நோய் 1000 குழந்தைகளில் ஒரு குழந்தையை பாதிக்கிறது. இந்த நோயினால், குழந்தைகளின் இடுப்பு இயல்பை விட கீழே நழுவும். குழந்தைகளின் இடுப்பில் ஏதாவது உறுத்துவது போல இருந்தாலோ, ஏதேனும் சத்தம் கேட்டாலோ, குழந்தைகளின் கால்கள் ஒரே நீளமாக இல்லாதிருந்தாலோ, அதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனை அடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஆறு மாதங்களுக்குள் கண்டறியப்பட்டால், 18 மாதங்களுக்கு ஒரு பெல்ட் அணிவித்து குணப்படுத்த முடியும். ஆறு மாதங்களுக்குப்பிறகு கண்டறியப்பட்டால் அறுவை சிகிச்சை தான் தீர்வு” என்றுக் கூறினார்.
யாரை அதிகம் தாக்கும்:லக்னோவைச் சேர்ந்த மருத்துவர் அமர் அஸ்லம், “எடைக் குறைவான குழந்தைகள், இரட்டை குழந்தைகள், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் குழந்தைகளுக்கு செப்டிக் ஆர்த்ரிடிஸ் எனப்படும் இடுப்பு தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதற்கு முதற்காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான். செப்டிக் ஆர்த்ரிடிஸ் நோய்க்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால், குழந்தைகளின் இடுப்பு இயக்கம் குறையும். 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது” என்றார்.
உங்கள் குழந்தைகள் இடுப்பு, முழங்கால், தொடைப்பகுதியில் வலி உள்ளதாக கூறும் பட்சத்தில், கீழே விழுந்து அடிப்பட்டதால் வலி இருக்கும் என அசால்டாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
இதையும் படிங்க:ரொம்ப நேரம் உட்கார்ந்து வேல பார்த்தா பக்கவாதம் வருமா?... நிபுணர்கள் சொல்வது என்ன?