சென்னை: குழந்தைகளின் எதிர்காலத்திற்காக எங்கள் சிரமத்தையும் பொருட்படுத்தாமல் நாங்கள் ஓடிக்கொண்டிருக்கிறோம் என, குழந்தைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சற்றும் கவனிக்காமல் உங்களின் கடமைகளை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே பணம் சேர்க்க ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோரை நினைத்து கோவப்படுவதா? இல்லை வருத்தப்படுவதா? இன்றைய சூழலில் தனியார்ப் பள்ளியில் சேர்த்து குழந்தைகளைப் படிக்க வைக்கப் பெற்றோர் படும் பாடு இருக்கிறதே.. கேட்டால் கல்லும் கண்ணீர் வடிக்கும். அதே நேரம் இதனால் குழந்தைகளின் எதிர்காலம் முழுமையான ஆரோக்கியம் பெறுமா? எனக் கேட்டால் அது கேள்விக் குறியே.. என்னதான் செய்வது என்ன பெற்றோரின் அலைமோதலுக்கு இடையே சில விஷயங்களை அலசிப்பார்ப்போம்.
குழந்தைகளின் வாழ்க்கை முறையில் உணவுப் பழக்கம்:
உங்களது குழந்தைப் பருவத்தைச் சற்று அசை போட்டுப் பாருங்கள். காடு கரைகள், வயல் வெளிகள், தோப்புகள் என வெறும் கால்களில் சுற்றித்திரிந்தது.. ஆரோக்கியமான உணவாகக் கஞ்சி, கூழ், களி, தானியங்கள், புளியங்காய், கள்ளிப்பழம், கொடுக்காப்புளி, பனம்பழம், முந்திரிப்பழம், இழந்த பழம், நாவல் பழம், அத்திப்பழம், மாங்காய் என ஒவ்வொரு நாளும் நண்பர்களுடன் சேர்ந்து பல புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சுற்றாத இடமே இல்லை எனச் சொந்த ஊர்களுக்குச் செல்லும் போதெல்லாம் ஆட்டோகிராப் படத்தில் வரும் ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே பாடலை போல எல்லா இடங்களைப் பற்றிய ஞாபகங்களையும் உங்கள் குழந்தைகளிடம் பகிர்ந்துகொண்டே வந்திருப்பீர்கள்.
வளர்ந்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அவற்றை யோசிக்கும்போது எவ்வளவு இனிமையாக இருக்கிறது. குழந்தைகளிடம் சொல்ல எத்தனை கதைகளும், சம்பவங்களும் அதனைப் பகிர்ந்துகொள்ள ஆரோக்கியத்துடன் நீங்களும் இருக்கிறீர்கள்..அப்படியே உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை முறையிலிருந்து சற்று யோசித்துப் பார்ப்போம்..
வளர்ந்த பின்னர் தற்போது நீங்கள் உண்ணும் செயற்கை உணவு முறைகளான ஃபிரைடு ரைஸ், பீட்ஸா, பர்கர், ஷவர்மா, சிக்கன் கிரில், சிக்கன் பிங்கர், பானி பூரி, பரோட்டா, காட் டாக் (hotdog), பப்ஸ் (puffs), அத்தோ ஆகிய துரித உணவுகளால் குழந்தைகளுக்குச் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், வளர்ச்சி குறைபாடு, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற நோய்களைப் பிறக்கும் முன்னரே பரிசாக அளிக்கிறோம். அப்படித் தப்பி வரும் குழந்தைகளும் அவர்களது குழந்தைப் பருவத்தில் மேற்கூறிய உணவு முறைகளின் நிறங்களாலும், சுவைகளாலும் ஈர்க்கப்பட்டு அடிமையாகிவிடுகின்றனர்.
அத்தகைய ஜங்க் புட், பாஸ்ட் புட் ஆகியவற்றில் கலந்துள்ள வேதிப்பொருட்கள், சுவையூட்டிகள் அவர்களது உடல் நலனுக்கு பெரும் ஆபத்தாக அமைந்து வருகிறது. இவர்களின் இந்த உணவுப்பழக்கத்தால் இளம் வயதிலேயே பல நோய்களுக்கு ஆலாகி மரணத்தையும் சந்தித்து வருவதை நாம் தினசரி பார்த்து வறுக்கிறோம்.
குழந்தைகளின் வாழ்க்கை முறையில் விளையாட்டு:
நீங்கள் குழந்தையாக இருந்த காலத்தில் விடுமுறை நாட்களை எப்படிக் கழித்தீர்கள் என்பது ஞாபகம் உள்ளதா? விடுமுறையில் ஒரு நாள் கூட வீடு தங்காமல் ஊரில் உள்ள நண்பர்களையும், தெரு நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு நொண்டி, கண்ணாமூச்சி, பல்லாங்குழி, கபடி, உப்பு மூட்டை, மரமேறல், நீச்சல், பட்டம் விடுதல், ஊசி நூல் கோர்த்தல், குண்டு விளையாட்டு என புது விளையாட்டுகளை விளையாடி இருப்பீர்கள்.
ஆனால் இன்றுள்ள குழந்தைகளின் விளையாட்டு முறைகளைச் சற்று ஆராய்ந்து பார்த்தல் சுற்றிச் சுற்றி அவர்களின் உடலையும், மன நலனையும் பாதிப்பதாகவே இருக்கிறது. படிப்பு மட்டும் முதலாக இருக்க வேண்டும் எனப் பள்ளியில் விளையாட்டுக்கான நேரத்தையே குழந்தைகளிடம் இருந்து பறித்துக்கொள்கின்றனர் சில பள்ளி நிறுவனங்கள்.