சென்னை:அதிக உடல் எடை காரணமாக, உடல் எடையைக் குறைக்க ஜிம், வாக்கிங், ஜாக்கிங் போகிறவர்களை பார்க்க முடிகிறது. இவர்கள் ஒரு பக்கம் என்றால், உடல் எடையை கூட்ட முடியாமல், ஒல்லியாக இருக்கும் மற்றொரு தரப்பினர். உடல் எடையைக் கூட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல. சற்று அதிகமாகவே மெனக்கெட வேண்டும். உடல் எடையை வேகமாக அதிகரிக்க வேண்டும் என்பதற்காக துரித உணவுகளை உட்கொள்வது, புரோட்டின் பொடிகளை சாப்பிடுவது, கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது என பலகட்ட முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் இது போன்ற செயல்கள் உங்கள் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த வகையில் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம். மேலும் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் 6 வேளை சாப்பிட வேண்டும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
எள்:இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழிக்கிணங்க உடல் எடையை கூட்ட நினைப்பவர்கள் உணவில் எள்ளை எடுத்துக் கொள்ளலாம். வீட்டில் எள்ளுப் பொடி அரைத்து வைத்து, சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். எள்ளு துவையல், எள்ளு சட்னி, எள்ளுருண்டை போன்றவற்றையும் சாப்பிடலாம். உடல் சூடு இருப்பவர்கள் எள்ளை தவிர்ப்பது நல்லது.
செவ்வாழைப்பழம்: செவ்வாழைப்பழத்தை ஒரு நாளைக்கு ஒன்று என உட்கொண்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். மேலும், செவ்வாழைப்பழத்தோடு தேன், பால் கலந்து ஸ்மூத்தியாகவும் குடிக்கலாம்.
பழைய சோறு: உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பழைய சோறு சாப்பிடலாம். அதனுடன் கெட்டி தயிர், நீச்ச தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து அதை குடிக்கலாம். அதனுடன் சின்ன வெங்காயம் பச்சையாக உட்கொள்ளலாம்.
ஹெல்தி ஸ்மூத்தி: இரவில் 4 முந்திரி, 4 பாதாம், 4 அக்ரூட் (வால்நட்), 5 பேரிச்சம்பழம், உலர் திராட்சை சேர்த்து ஊற வைக்க வேண்டும். காலையில், ஊற வைத்த நீருடன், இவற்றை சேர்த்து அரைத்து ஸ்மூத்தியாக குடிக்கலாம். இதனுடன் வாழைப்பழம் அல்லது ஆப்பிள் போன்ற பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
தேங்காய் எண்ணெய்: உடல் எடையைக் கூட்ட வேண்டும் என நினைப்பவர்கள் உணவில் தேங்காய் எண்ணெய் பயன்பாட்டை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், எண்ணையை முடிந்த வரை கொதிக்க வைக்காமல் பயன்படுத்த வேண்டும்.
பால் சம்பந்தப்பட்ட பொருட்கள்: பால், தயிர், வெண்ணெய், நெய், சீஸ் போன்றவற்றை சாப்பிடலாம். இவை உடல் எடை அதிகரிக்க உதவும்.