“யாரும் பட்டினி கிடக்கக்கூடாது; யாரெல்லாம் சமைக்க முடியாத நிலையில் இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் சமுதாய சமையல் மையங்கள் மூலம் உணவு சமைக்கப்பட்டு, அவரவர் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும்.” - இது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சொன்னது.
உலகமே கோவிட்-19 கொள்ளை நோய் தாக்கத்தால் அதிர்ச்சியில் நிலைகுலைந்து, அதிலிருந்து மீள்வதற்கு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி சொல்லப்பட்டதுதான் முக்கியம்! கேரள அரசானது அம்மாநில மக்களின்பால் அதிக அக்கறையோடும் கவன உணர்வோடும் செயல்பட்டுக் கொண்டிருப்பதால், ஒட்டுமொத்த கேரளமும், அதன் முழுமையான ஆற்றலுடனும் வலுவுடனும் இப்போது தலை தூக்கியுள்ள கொள்ளை நோயை எதிர்கொள்ளவும் அதை எதிர்த்துப் போராடவும் தயாராக இருக்கிறது.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் தொடங்கிய கொடிய கரோனா வைரஸ் கொள்ளை நோயின் பரவலால் உலகமே திகைத்துப்போய் நிற்கிறது. சீனத்தை அடுத்து, ஈரான், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளையும் அது கடுமையான பாதிப்பை உண்டாக்கியது. பின்னர், இந்த வைரஸானது, இந்தியா உள்பட்ட தெற்காசிய நாடுகளுக்கும், அரபு நாடுகள் மூலமாக பிரிட்டன், அமெரிக்கா நாடுகளுக்கும் பரவியது.
ஒட்டுமொத்த உலகையும் கட்டுப்படுத்தும் அளவுக்கு ஆற்றல் படைத்தவை எனப் பெருமை கொண்ட இந்த நாடுகளின் அரசுகள், கோவிட்- 19 கொள்ளை நோயை எதிர்கொள்வதில் பின்பற்றிய அணுகுமுறை சுத்தமாக பலன் அளிக்கவில்லை. பிரிட்டனைப் பொறுத்தவரை, யதார்த்தமாக என்ன நிலைமை என்பதை உணர்ந்துகொள்ளக் கூடியதற்கு முன்னமே அந்த நாடு பலியாகும் நிலைக்குச் சென்றுவிட்டது.
கேரளாவில் கோவிட் -19 பாதித்த முதல் நபர் கண்டறியப்பட்டு சரியாக ஒரு மாதத்துக்குப் பின்னர், அமெரிக்க அரசு தன் மண்ணில் ஒரு கோவிட் நோய்த் தாக்கத்தை உறுதிப்படுத்தியது. 3.34 கோடி மக்கள் தொகையைக் கொண்ட கேரளத்தில், முதல் கோவிட்-19 வைரஸ் தாக்கம், ஜனவரி 30 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அதேவேளை, 1.94 கோடி மக்கள் தொகை கொண்ட நியூயார்க்கில், கடந்த மார்ச் 1 அன்றுதான் முதல் கோவிட்-19 தாக்கம் பதிவானது.
கேரளத்தில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கரோனா வைரஸ் தொற்றானது, சமூகப் பரவலாக வாய்ப்பு உண்டு என்று தகவல்கள் வெளியானபோதும், அந்த மாநில அரசு அப்படியே சாய்ந்துவிடவில்லை. துல்லியமான முன் எச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கிய கேரள அரசு, முழு வீரியத்துடன் கொள்ளை நோயை எதிர்கொண்டு சமாளித்து வருகிறது.
அந்த மாநிலத்தில் இதுவரை இரண்டு கோவிட்-19 இறப்புகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன; 265 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். ஆனால், அமெரிக்காவின் நிலைமையோ பெரும் கவலைக்கு உரியதாக உள்ளது. நியூயார்க்கில் மட்டும் ஏப்ரல் 5 ஆம் தேதி நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 3,218.
அத்துடன், அமெரிக்கா முழுவதும் 2,77,522 பேர் கரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியைக் கட்டுப்படுத்த, நியூயார்க் மாகாண ஆளுநரான ஆண்ட்ரூ கியூமோ, அமெரிக்காவின் முழு சுகாதாரக் கட்டமைப்பையும் நியூயார்க்கிற்குக் கொண்டுவருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
உயிர் இழப்பு எண்ணிக்கையைப் பொறுத்தவரை, நியூஜெர்சி மாகாணமானது நியூயார்க்குக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. கலிஃபோர்னியா, புளோரிடா, மிச்சிகன் ஆகியவற்றிலும் இதே நிலைமைதான் காணப்படுகிறது. கடந்த 3ஆம் தேதி அன்று அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 3ஆம் தேதி 1,480 பேர் கோவிட்-19 கொள்ளை நோயால் இறந்துபோனார்கள். பல இடங்களில் இரவு நேரத்திலும் பல சடலங்களையும் மொத்தமாக அடக்கம் செய்யும் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. சிக்கலான நோயாளிகளுக்குக்கூட நியூயார்க் மருத்துவமனைகளில் இடம் இல்லை. ராணுவத்தை அழைக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.
ஒரு மாதத்திற்கு முன்னர் கோவிட் வைரஸ் ஏற்கெனவே கொடியதான ஒன்றாக உருப்பெற்று, உலகம் முழுவதும் மனித உயிர்களுக்கு நீடித்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருந்தது. அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் செயல்பாடு அலட்சியமானதாகவே இருந்தது. இதுவும் இன்னொரு வகையான காய்ச்சல் என்றும், அமெரிக்கா இதில் கவலைப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
வைரஸால் உண்டாகும் அபாயங்களை அரசாங்கமானது தொடர்ந்து குறைத்து மதிப்பிட்டு வந்தபடி இருக்கையில் சில வாரங்கள் போய்விட்டன. நோய்ப் பரவலைச் சரிபார்க்க எந்த ஒரு தீவிர முயற்சியோ அல்லது முன் எச்சரிக்கை நடவடிக்கை எதுவுமோ எடுக்கப்படவில்லை. தனிநபர் தனிமைப்படுத்தல், மருத்துவத் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளைக்கூட அரசாங்கம் கருத்தில் கொள்ளவில்லை.
கரோனா வைரஸ் கொள்ளை நோய்ப் பரவலைக் கண்டுகொள்ளாமல் விட்டதற்கான கடுமையானப் பலனாக, யாரும் எந்தவிதமான உதவியும் செய்தாலும் ஒன்றும் செய்யமுடியாது என்கிற நிலைக்கு அமெரிக்காவைத் தள்ளிவிட்டது. இதனால், அமெரிக்காவின் உயிரிழப்போர் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் மேல் ஆகக்கூடும்;
தடுப்பு நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ளத் தவறிய இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளின் உயிரிழப்புகளைவிட, அமெரிக்காவில் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு முன்கூட்டியே எச்சரிக்கையாகத் தெரிவித்தது. இப்போது, கோவிட் கொள்ளை நோயை எதிர்கொள்வதற்குத் தவறாகப் போய்விடாத சரியான சோதனை முறை மற்றும் செயற்கைச் சுவாசக் கருவிகள் அவசியம் என்று பேச ஆரம்பித்துள்ளது.
கடந்த நவம்பரில் கரோனா வைரஸ் உலகின் பல மையமான இடங்களில் அழிவுத்தன்மை கொண்ட தன் பாதிப்பைக் காட்டியபோது, கேரள அரசு விழித்துக்கொண்டுவிட்டது. மோசமான ஒரு நெருக்கடி நிலைமையை முன்கூட்டியே எதிர்கொள்ளும் வகையில், குறைகள் இல்லாத இடைவிடாத முயற்சிகளை கேரளம் தொடங்கியது.
வரவிருக்கும் ஆபத்தை அந்த செயல்பாடுகள் கட்டுப்படுத்தும் என்று அது நம்பியவாறே, இப்போது அம்மாநிலத்தில் கொள்ளை நோயை அது கட்டுக்குள் வைத்திருக்கிறது. கோவிட் - 19 வைரஸைக் கட்டுப்படுத்துவதில், ‘இன்று கேரளம் என்ன நினைக்கிறதோ அதை இந்தியா நாளை சிந்திக்க வேண்டும்’ என, இந்தியாவின் முன்னணி தேசிய ஊடகங்களில் ஒன்று குறிப்பிட்டது.
கொள்ளை நோயை எதிர்கொள்வதில், கேரளம் எடுத்துவரும் இடைவிடாத - தொலைநோக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நோயை எதிர்கொள்வதன் ஒவ்வொரு அம்சத்திலும், அதன் செயல்பாடுகள் குறித்தும் அது விவரிக்கின்றது. இந்த நுட்பத்தை அறிந்துகொள்ள தெலங்கானா உள்பட்ட பல மாநில அரசுகள் தங்களின் சுகாதார நிபுணர்களின் குழுக்களை கேரளத்துக்கு அனுப்பியிருந்தன.
சற்று தாமதமாக ஆனபோதும்கூட, கேரள பாணியை அறிந்து அதையே தங்கள் மாநிலத்திலும் கையாள்வதற்கான வேலையைத் தொடங்கினர். துல்லியமான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டல், உலகின் பல பகுதிகளிலும் உள்ள நலவாழ்வு நிபுணர்களுடன் தொடர்ச்சியாக கலந்துபேசுவது, ஆலோசனை பெற்றுக்கொள்வது, வெளிநாடுகளிலிருந்து வந்த ஒவ்வொரு நபரையும் கண்டறிவதற்கான முயற்சிகள், அவர்கள் பயணம் செய்யும் இடங்களையும் அவர்கள் சந்திக்கும் எல்லா நபர்களையும் பட்டியலாகத் தொகுத்து ஒரு வரைபடமாகத் தயாரிக்கும் மிகப் பெரிய பணி.
அத்துடன் அந்த நபர்களின் இரண்டாம் நிலைத் தொடர்புகளை சாத்தியப்படும் வகையில் எல்லாம் கண்டறிதல், நோய்த் தொற்று அறிகுறிகள் உடையவர்களை மருத்துவ ரீதியில் தனிமைப்படுத்துதலும் மற்றவர்களை சுய தனிமைப்படுத்தலும், அவ்வப்போது நிலவரத்தை மதிப்பிடவும் பகுப்பாய்வு செய்யவும் நலவாழ்வுத் துறை அலுவலர்களும் அரசாங்கமும் மேற்கொள்ளும் வழக்கமான ஆய்வுக் கூட்டங்கள், அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடுவது, இடைவிடாத தயாரிப்பு முயற்சிகள் ஆகிய அனைத்தும் சேர்ந்ததுதான், கோவிட் கொள்ளை நோய்ப் பரவலை எதிர்த்து சமாளிக்கும் சிறப்பான 'கேரள பாணி'யை உருவாக்குவதில் பங்காற்றியது எனலாம்.
கோவிட் கொள்ளை நோயை எதிர்த்து பாதுகாப்பாக வாழ்வதற்கு உலக அளவில் இது சிறந்த பாணியாகக் கருதப்படுகிறது. கேரளமானது தொடக்கத்தில் இருந்தே கோவிட் கொள்ளை நோயை எதிர்கொள்வதில் இப்படி அதிர்வை ஏற்படுத்தும் செயல்முறையைக் கடைப்பிடிக்கவில்லை.
முன்னதாக, இன்னொரு கொடிய தொற்று நோயான நிஃபா காய்ச்சலைக் கட்டுப்படுத்தியதன் மூலம் கேரளத்துக்கு குறிப்பிடத்தக்க அனுபவமும், வலிமையும் கிடைத்திருந்தது. அந்த அனுபவமே கோவிட் கொள்ளை நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும், அதற்காக அம்மாநில நலவாழ்வுத் துறையானது நன்கு தயாரிப்புடன் இருக்கச்செய்து, தக்க தருணத்தில் உரிய நடவடிக்கைகளில் ஈடுபடவும் பெரிதும் உதவியது.
2018 மே 2 முதல் ஜூன் 10வரை, கேரளம் முழுவதும் நிஃபா வைரசால் பய பீதியால் உறைந்து போயிருந்தது. அப்போது, கேரள நலவாழ்வுத் துறை மேற்கொண்ட முறையான ஒழுங்கமைக்கப்பட்ட பெரிய அளவிலான நடவடிக்கைகள் ஆகியவை கொடிய நிஃபா வைரசுக்கு எதிரான முழு வெற்றியை ஈட்டித் தந்தன.
நிஃபா வைரஸ் தாக்கத்தைக் கையாண்ட கேரள நலவாழ்வுத் துறையின் பணிகளுக்கு, தேசிய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் எல்லா பகுதிகளிலிருந்தும், அம்மாநிலத்துக்கு பாராட்டையும் அங்கீகாரத்தையும் கொண்டுவந்து சேர்த்தது. சீனாவின் வூகானில் இருந்து கேரளத்துக்குத் திரும்பிவந்த திருச்சூரைச் சேர்ந்த ஒரு பெண் மாணவியே, அம்மாநிலத்தின் புதிய கரோனா வைரஸ் தாக்கம் வந்த முதல் நபர் ஆவார்.
2020 ஜனவரி 30 ஆம் தேதி அன்று அவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த உறுதிப்படுத்தல் முதல் அம்மாநில நலவாழ்வுத் துறையானது, முழுமையான விழிப்புடன் திட்டமிட்டபடி நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியது. நல்வாழ்வு முன் எச்சரிக்கைகள் மற்றும் நோய்த் தடுப்புக்கான உத்திகளில் கூடுதல் அக்கறை செலுத்தப்பட வேண்டும்; அதிக எச்சரிக்கை இருக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவிப்பு செய்தது.
இந்தப் பிணியாளரின் தொற்றை, பூனாவில் உள்ள நோய் நுண்மவியல் ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியதுடன், மைய அரசின் அமைச்சரவைச் செயலாளர், அதை காணொலிக் காட்சி மூலமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சீனாவின் வூஹானில் இருந்து திரும்பிய 20 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் எடுக்கப்பட்ட உயிர்ம மாதிரிகளில், ஒருவர் மட்டுமே கோவிட் தாக்கம் உடையவர் எனக் கண்டறியப்பட்டது. கேரள நலவாழ்வுத் துறை அமைச்சர் கே கே சைலஜா, அத்துறையின் செயலர் ராஜன் கோப்ராகடே ஆகியோர் அன்றைய பொழுதை திருச்சூர் மருத்துவக் கல்லூரியில் உயர்மட்டக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.
மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் அரசாங்கம் உடனடி எச்சரிக்கைத் தகவலை அனுப்பியது. சீனத்திலிருந்து 200 பேர் கேரளம் திரும்பி இருந்தனர் என்பதால், அந்தப் பயணிகளுக்கு நோய் அறிகுறி அறிய அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு முறைமை கொண்டுவரப்பட்டது.
உடனடியாக, 1,036 பேர் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க வைக்கப்பட்டனர். 15 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். கோவிட் நோய்க்கான தனியான கட்டுப்பாட்டு அறையும் உதவி எண்களும், ஒரே நாளில் ஏற்பாடு செய்யப்பட்டன.
தொற்றுத் தொடர்பு தடமறிதலில் கேரள பாணி:
முதல் கோவிட் நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவுடன், திருச்சூர் மருத்துவக் கல்லூரியில் போர்க்காலத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டுவந்த கட்டணப் பிரிவானது, கோவிட் காய்ச்சலுக்கான தனிமைப்படுத்தப்பட்ட பிரிவாக மிக விரைவாக மாற்றி அமைக்கப்பட்டது.
வசதி கொண்ட இருபது தனி அறைகள் தயார் செய்யப்பட்டன. ஒரே சமயத்தில் 24 பேரைத் தனிமைப்படுத்தி, கவனிக்கவும் சிகிச்சையளிக்கவும், தனியாக ஒரு பிளாக் தயாராக இல்லை. ஒவ்வொரு நோயாளிக்கும் தனிக் கழிப்பிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
வூஹான் பெண் மாணவருக்கு நோய்த் தொற்று பரிசோதனை செய்யப்பட்ட அடுத்த 5 மணி நேரத்திற்குள், தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு அமைக்கப்பட்டது. அங்கு அவர் மாற்றப்பட்டார். அவருடன் பயணம் செய்த மற்ற ஐந்து மாணவர்களும், திருச்சூர் பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
கேரளாவில் தொற்றுப் பரவலை கவனித்து, அதைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவியதில் முக்கியமான ஒரு காரணி, தொற்றுள்ள நபர்களின் தொடர்புகளைத் தடம் அறிந்த முறைமை ஆகும். வேறு எந்த மாநிலமும் அதைப் பற்றி பெரிதாக சிந்திக்கவில்லை அல்லது அப்படியான முயற்சிகளில் இறங்கியிருக்கவில்லை.
தொற்றுக்கான வாய்ப்புள்ள தொடர்புகளைக் கண்டுபிடிப்பதில் கடுமையான பணி அவசியமாக உள்ளது. ஏனென்றால், நோயாளி யாராக இருந்தாலும் சில நாள்களில் அவர் போய் வந்த அனைத்து இடங்களிலும் - கடைகளோ உணவகங்களோ அல்லது பொது மக்கள் கூடும் பிற இடங்களோ எதுவாகவும் இருக்கலாம்; நபர்களைப் பொறுத்தவரை, நண்பர்கள், உறவினர்களைத் தவிர பயணம் செய்யும்போது உடன்வந்தவர்கள் அத்தனைப் பேரும், அது உள்ளூரோ அல்லது வெளியூரோ என்றில்லை தொற்றுவாய்ப்பு உள்ள அனைத்து அம்சங்களையும் தடமறிந்தாக வேண்டும்.
நல்வாழ்வுத் துறையானது உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டு, பல துறைகள் மற்றும் குழுக்களில் பணியாற்றும் ஊழியர்களிடையே குறிப்பிடத்தக்க ஒருங்கிணைப்புடன், தொற்றுவாய்ப்புத் தொடர்புப் பட்டியலை அவசரமாகத் தயாரிக்க வேண்டி இருந்தது. மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட மருத்துவ அலுவலர்களும் தொடர்புத் தடமறிதல் பணியைத் தலைமையேற்று கண்காணிப்பை முடுக்கிவிட்டனர். நோயாளிகளின் பட்டியல் மற்றும் ‘பயண வரைபடமானது’ பின்னர் பொதுமக்கள் அறியும்வகையில் வெளியிடப்பட்டன.
பயண நேரம் - பாதை வரைபடத்தின்படி குறிப்பிட்ட நோயாளியுடன் யாராவது நேரடியாக தொடர்பு கொண்டிருந்தால், உடனே நல்வாழ்வுத் துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி பொது மக்களுக்கு அந்தத் துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் கொடிய கரோனா வைரஸ் பரவலிலிருந்து யாரும் தன்னையும் தன் சொந்தக் குடும்பத்தையும் மட்டும் அல்ல, சமூகத்தில் அதிகமானவர்களைக் காப்பாற்றவும் இது உதவும்; எனவே, ஒவ்வொருவரும் தாங்களே முன்வந்து தகவல் தெரிவிப்பதற்குத் தயங்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
ஏற்கெனவே மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்தவர்களும் மருத்துவமனை ஊழியர்களும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம், அதை எப்படி சரியாக அணிவது என்பது பற்றி மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் ஒலிபெருக்கிகள் மூலமாக அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மிக அண்மையில் சீனத்திலிருந்து கேரளம் திரும்பியவர்கள் யாராக இருப்பினும், அவர்களுக்கு கோவிட் நோய்க்கான அறிகுறிகள் இருந்தாலும் சரி, எந்த அறிகுறியும் இல்லாவிட்டாலும் சரி அதைப் பொருட்படுத்தாமல் ஊர் திரும்பியவுடன் உடனடியாக நல்வாழ்வுத் துறைக்கோ அல்லது அருகிலுள்ள அரசு மருத்துவமனையிலோ தெரிவிக்க வேண்டும்; அப்படி செய்யத் தவறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அறிக்கை விடுத்திருந்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.