கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த அவ்வப்போது சோப்புகளை கொண்டு கை கழுவ வேண்டும் அல்லது சானிடைசர் எனப்படும் கிருமிநாசினிகளை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதில், சானிடைசரை பயன்படுத்தவே பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர். ஏனென்றால், சானிடைசர்களை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், தண்ணீர் தேவைப்படாது. இருப்பினும், சானிடைசர்களால் கைகளிலிருக்கும் வைரஸ்களை முழுமையாக அழிக்க முடியாது என்ற கருத்தும் பரவிவருகிறது.
இது குறித்து தோல் மருத்துவர் டாக்டர். சைலாஜா ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டி...
கைகளை சோப்புகளைக் கொண்டு கழுவுவதற்கும், சானிடைசர்களை பயன்படுத்துவதற்கும் உள்ள வேறுபாடு என்ன?
உங்கள் கைகளை சோப்புகளைக் கொண்டு கழுவுவது என்பது பாரம்பரிய வழி. இது சானிடைசர்களை பயன்படுத்துவதைவிட சிறப்பானது. சோப்புகளைப் பயன்படுத்தி கைகளை கழுவும்போது அது கைகளிலிருக்கும் அழுக்கு, கிருமிகள் மற்றும் எண்ணெய் பிசுக்குகளை நீக்குகிறது. சில வகையான கிருமிகளை அகற்ற சானிடைசர்களைவிட சோப்புகள் பயனுள்ளதாக இருக்கும். மேலும், சோப்புகளைக் கொண்டு கை கழுவினால், அது நீண்ட நேரத்திற்கு நீடிக்கும்.
சானிடைசர்கள் இரண்டு வகைப்படும்:
ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர்கள் மற்றும் ஆல்கஹால் அல்லாத சானிடைசர்கள். இதுகுறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர்களை விரைவாக உபயோகிக்கும்போது, அவை கைகளில் இருக்கும் சில வகையான வைரஸ்களை நீக்காது. உங்கள் விரல்கள் இன்னும் ஈரமாக இருப்பதால், இப்படி நடக்கிறது.
அதிகப்படியாக சானிடைசர்களை பயன்படுத்தினால், அது எந்தமாதிரியான விளைவுகளை உண்டாக்கும்?
அதிகப்படியாக சானிடைசர்களை பயன்படுத்தும்போது பொதுவாக தோலில் எரிச்சல், வறட்சி, அரிப்பு, இரத்தப்போக்கு உள்ளிட்டவை ஏற்படும்.
கர்ப்பிணிகள், குழந்தைகள் நீண்ட காலம் இந்த சானிடைசர்களை பயன்படுத்தினால், அது எந்தமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.