தினம் 7,000 அடி (steps) நடப்பவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் மரணத்துக்கான வாய்ப்பு 50 முதல் 70 சதவீதம் குறையும் என அமெரிக்க மருத்துவ கூட்டமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்காவின் நான்கு மாகாணங்களைச் சேர்ந்த 2,110 நபர்களை (38 - 50 வயது) ஆய்வு செய்து இந்த அறிக்கையை சமர்பித்துள்ளனர். இதில் 1,205 பேர் பெண்கள், 888 பேர் ஆப்ரிக்க அமெரிக்கர்கள்.
2005 - 2006ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 7 நாட்கள் இவர்கள் பாதங்களில் ஆக்சிலரோமீட்டர் கருவி பொருத்தப்பட்டு நடப்பது கணக்கிடப்பட்டது. இதில் பங்கேற்றவர்களை 10 ஆண்டுகள் 8 மாதங்கள் ஆய்வுக் குழு கண்காணித்தது. இவர்களில் 72 நபர்கள் (3.4%) உயிரிழந்துள்ளனர்.
இதனடிப்படையில் மக்களை மூன்று விதமாக பிரிக்கலாம்:
7,000 அடிக்கு குறைவாக தினமும் நடப்பவர்கள்
7,000 - 9,999 அடி தினமும் நடப்பவர்கள்
10,000 அடி அல்லது அதற்கு மேல் நடப்பவர்கள்
இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள், எத்தனை அடி நடக்கிறார்கள் என்பது மட்டுமில்லாமல், எவ்வளவு வேகத்தில் நடக்கிறார்கள் என்பதும் கணக்கிடப்பட்டது. 30 நிமிடங்களில் யார் அதிக அடி எடுத்து வைக்கிறார்கள் என்பது கணக்கில் கொள்ளப்பட்டது. எவ்வளவு நேரத்தில் 100 அடி நடக்கிறார்கள் என்பது மற்றொரு கணக்கீடு.
அதேபோல் பங்கேற்றவர்களின் உடல்நலனும் கணக்கில் கொள்ளப்பட்டது. எத்தனை பேருக்கு சிகரெட் புகைக்கும் பழக்கமுள்ளது, உடல் எடை, பிஎம்ஐ (உடல் நிறை குறியீடு), கொழுப்பின் அளவு, ரத்த சர்க்கரை அளவு, குடிப்பழக்கம், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு கூறுகள் ஆய்வில் கணக்கெடுக்கபட்டன.
இப்படி பலவற்றை ஆய்வு செய்ததில், ஒரு நாளைக்கு 7,000 அடிக்கு மேல் நடப்பவர்களுக்கு, அதைவிட குறைவாக நடப்பவர்களை காட்டிலும் மரணத்துக்கான வாய்ப்பு 50 முதல் 70 சதவீதம் குறைவு என தெரிய வந்துள்ளது. அதேசமயம் 10 ஆயிரம் அடிக்கு மேல் நடப்பவர்களுக்கும் இதே அளவுதான் மரணத்துக்கான வாய்ப்பு குறைவு என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.