ஹைதராபாத்: பொதுவாகவே மக்கள், தோளில் வெள்ளை புள்ளி போன்ற குறைபாடுகளை பொது வெளிகளில் ஒரு சில நபர்களிடம் கண்டால், அவர்களை விட்டு விலகி செல்வது வழக்கம். உலகில் பல மக்களும் இதுபோன்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுபோன்று உடலில் வெள்ளைப் புள்ளிகள் உருவாகுவது விட்டிலிகோ (Vitiligo) என்று அழைக்கப்படுகிறது. இதுகுறித்த போதுமான விழிப்புணர்வு மக்களிடையே இல்லை எனக் கூறலாம்.
இந்நிலையில் பிரபல மலையாள நடிகையும், பாடகியுமான மம்தா மோகன்தாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’தான் விட்டிலிகோ நோயால் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் அவரது தோலின் நிறம் மாறுகிறது எனவும்; ஆனாலும் இதனை எதிர்த்து போராட சூரியனுடைய உதவி வேண்டும்’ என தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இவரது இந்தப் பதிவிற்கு திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும், ’இதனை போராடி உங்களால் வென்று வர முடியும்’ எனத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாகப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த விட்டிலிகோ நோய் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "வெள்ளை புள்ளி என்பது தான் மருத்துவ கூற்றுப்படி விட்டிலிகோ என அழைக்கப்படுகிறது. இந்த நோயானது ஜெனிடிக், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல காரணங்களால் உடலிற்கு நிறத்தைத் தரும், மெலனின் செல்களின் குறைபாட்டால் ஏற்படுகிறது. இது வெள்ளை தொழுநோய் (White leprosy) என அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக இதனை பலரும் தொற்று நோய் என நினைத்துக் கொள்கின்றனர்.