தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

2020ஆம் ஆண்டின் டாப் டயட் முறைகள் என்னென்ன? - தூக்கமின்மை

உடல்நலன் சார்ந்து சிந்திப்பதன் ஒரு பகுதியாக, ஜங்க் உணவுகளைத் தவிர்த்து, கீடோ, பேலியோ, மிலிட்டரி, சர்ட்ஃபுட் டயட் என சிரத்தையெடுத்து வித்தியாசமான டயட் முறைகளை பலர் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் 2020ஆம் ஆண்டில் பெரும்பான்மை மக்களால் அதிகம் பின்பற்றப்பட்ட டயட் முறைகளையும், அவர்கள் உட்கொண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுகள் குறித்தும் பார்க்கலாம்.

ஊட்டச்சத்து
ஊட்டச்சத்து

By

Published : Dec 27, 2020, 8:55 PM IST

2020ஆம் ஆண்டு கரோனா பெரும்பான்மை மக்களுக்கு கேடுகளை விளைவித்து பயத்தில் ஆழ்த்தி இருந்தாலும், மக்களின் உணவுப் பழக்கத்தில் ஒரு நேர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தி உள்ளது. கரோனா சூழல் காரணமாக பொதுமக்கள் பெரும்பாலும் தங்களது வீடுகளிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். உடல் உழைப்பு, அது சார்ந்த உணவுப் பழக்கத்துக்கு மக்கள் பெரும்பாலும் பழக்கப்பட்டிருந்த நிலையில், உடல் உழைப்பைத் தவிர்த்து தங்களது வீடுகளிலேயே முடங்க வேண்டிய நிலைக்கும், ’வொர்க் ஃப்ரம் ஹோம்’ வழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டனர்.

ஆனால், இது மக்களின் உணவுப் பழக்கத்தில் ஒரு சாதகமான எதிர்வினையை ஆற்றியுள்ளது. கரோனா பயம் காரணமாக ஊட்டச்சத்து சார்ந்த, சரிவிகித உணவுகளை உட்கொள்ளவும், தினசரி உடற்பயிற்சிகளை தீவிரமாக மேற்கொள்ளவும் பெரும்பாலானோர் தொடங்கியுள்ளனர்.

உடல்நலன் சார்ந்து சிந்திப்பதன் ஒரு பகுதியாக, ஜங்க் உணவுகளைத் தவிர்த்து, கீடோ, பேலியோ, மிலிட்டரி என சிரத்தையெடுத்து வித்தியாசமான டயட் முறைகளை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் 2020ஆம் ஆண்டில் பெரும்பான்மை மக்களால் அதிகம் பின்பற்றப்பட்ட டயட் முறைகளையும், அவர்கள் உட்கொண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுகள் குறித்தும் பார்க்கலாம்.

டயட்

கட்டுக்கோப்பான உடலமைப்பைப் பேண ஒரு குறிப்பிட்ட டயட் முறையைத் தேர்ந்தெடுத்து அதனைப் பின்பற்றுவது தற்போது வழக்கமாகிவிட்டது. அவ்வாறு இந்த ஆண்டு பலரால் பின்பற்றப்பட்ட டயட் முறைகளைக் கீழே காணலாம்.

கீட்டோ டயட் : பயன்களும் குறைகளும்

கீட்டோ

அதிக கொழுப்பு, குறைவான கார்போஹட்ரேட் என்பதைப் பிரதானமாகக் கொண்டுதான் கீட்டோ உணவு முறை பின்பற்றப்படுகிறது.

பிரபலங்களின் முதல் தேர்வாக பொதுவாக இந்த கீட்டோ டயட் விளங்குகிறது. விரைவான எடை இழப்புக்கு உதவும் இந்த டயட் முறை, இந்த ஆண்டு பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது.

தானியங்கள், சர்க்கரை, ரொட்டி, ஆல்கஹால், பால் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை இந்த டயட் முறையில் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

தவிர, இந்த ஆண்டு இந்த உணவு முறை தலைப்புச் செய்திகளில் இடம்பெற மற்றொரு காரணமாக இருந்தது ஒரு பிராந்திய மொழி நடிகையின் மரணம். பொதுவாக கீட்டோ உணவு முறை உடலில் ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், மருத்துவர்களின் அறிவுரையின்படி இதனைப் பின்பற்றுவதே உகந்த வழிமுறையாகும். மேலும், இந்த உணவு முறையால் நீடித்த வயிறுப் பிரச்னைகள், தசைப் பிடிப்பு, குமட்டல், படபடப்பு, சோம்பல் உள்ளிட்ட சில பக்க விளைவுகளும் பொதுவாக ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இண்டர்மிட்டன் ஃபாஸ்டிங் (Intermittent Fasting)

சீரான இடைவெளியில் உண்ணாவிரதம் இருப்பதே இண்டர்மிட்டன் ஃபாஸ்டிங். தனி நபர் வசதிக்கேற்ப இதனை மேற்கொள்ளலாம், இதனை பொதுவாக இரு முறைகளில் மேற்கொள்ளலாம்.

1. காலையில் லேசான உணவை எடுத்துக்கொள்வது.

மதியம் குறைவான உணவு மற்றும்

இரவு உணவைத் தவிர்த்தல்

2. வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை திட உணவை முற்றிலுமாகத் தவிர்த்தல்.

எடை இழப்பு, உடல் நச்சுத்தன்மைப் போக்குவது (detoxify), நினைவாற்றலை அதிகரிப்பது, ஆயுள் அதிகரிப்பு ஆகியவை இந்த டயட் முறையின் பலன்கள் எனக் கூறப்படும் நிலையில், இந்த ஊரங்கின்போது மக்கள் பலரும் இந்த உணவு முறையைப் பின்பற்றினர்.

ஆனால் தேவையற்ற நீடித்த உண்ணாவிரதம், சிறுநீரகம், கணையம் ஆகியவற்றின் செயல்பாடுகளை எதிர்மறையாக பாதிக்கும். உடல் செயல்பாட்டிற்கு மிகவும் அவசியமான உடல் கொழுப்புகளையும் இது குறைக்கக் கூடும். இவை முக்கியமாக தோல், மூளை ஆகியவற்றை பாதிக்கும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

மிலிட்டரி டயட்

லோ-கலோரி டயட் உணவு இந்த ஆண்டு மிகவும் பிரபலமாக இருந்தது. ஏனெனில் இது வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே பின்பற்றப்பட வேண்டும், மீதமுள்ள 4 நாள்களுக்கு வழக்கமான உணவு முறையைப் பின்பற்றினால் போதுமானது.

அதன்படி, முதல் மூன்று நாள்களுக்கு ஒரு நபர் 1100 முதல் 1200 கலோரிகளையும், அடுத்த நான்கு நாள்களுக்கு 1800 கலோரிகளையும் குறைவாக ஒரு நபர் உட்கொள்ள வேண்டும்.

இந்த உணவு மூன்று நாட்களுக்குள் சுமார் இரண்டு கிலோ எடை வரை குறைக்க உதவும் எனக் கூறப்படுகிறது.

சர்ட்ஃபுட் டயட் (Sirtfood Diet)

தற்போதைய கரோனா சூழ்நிலையில் சர்ட்ஃபுட் டயட்டை மேற்கண்ட, பின்வரும் டயட் முறைகளிலேயே சிறந்த ஒன்று எனக் கூறலாம். ஏனெனில் இந்த உணவில், உடலில் உள்ள மாசுக்களை வெளியேற்ற உதவும் ரசாயனக் கலவைகளான ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் அதிகம் அடங்கியுள்ளன.

சர்ட்ஃபுட் டயட்

இந்த உணவு முறை உடல் கொழுப்பை எரிக்கவும், அதை ஒட்டிய எடைக் குறைப்புக்கும் உதவுகிறது. கிரீன் டீ, மஞ்சள், ஆப்பிள், பார்ஸ்லி, சிட்ரஸ் அமிலம் அடங்கிய பழங்கள், புளுபெர்ரி, சோயா, டார்க் சாக்லேட், வாழைப்பழங்கள், ஆலிவ் எண்ணெய் ஆகியவை இந்த உணவு முறையின் பிரதான உணவுப் பொருள்கள்.

இவை, உடலில் உள்ள சர்டுயின் (Sirtuin protein) புரதத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. இந்த சர்டுயின் புரதம் உடலின் செரிமானத்தை பாதிக்கவல்ல உயிரணுக்கள், சருமத்தில் வீக்கம், வயது மூப்பை ஏற்படுத்தவல்ல உயிரணுக்கள் ஆகியவற்றிடமிருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது.

இவை தவிர, உடல் எடையைக் குறைப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, பேலியோ டயட், அட்கின்ஸ் டயட் (Atkins diet), டேஷ் டயட் (dash diet) போன்ற உணவுப் பழக்கங்களும் பெரும்பான்மை மக்களால் இந்த ஆண்டு பின்பற்றப்பட்டன.

ஊட்டச்சத்துமிக்க உணவின் முக்கியத்துவம்

கரோனா நேரடியாக மக்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்குவதால், இந்த ஆண்டு கிட்டத்தட்ட அனைவரும் தங்களின் உணவில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் பெரும்பாலான உணவில் சேர்க்கப்பட்டுள்ளன. உணவகங்களும் சிறப்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை தங்கள் உணவுப் பட்டியலில் இணைத்துள்ளன.

மருத்துவர்களும் வைட்டமின் சி, வைட்டமின் டி மற்றும் பிற மல்டிவைட்டமின் சத்துகள் நிறைந்த மாத்திரைகளை மக்கள் உட்கொள்ளுமாறு பரிந்துரைத்தனர். எடையைக் குறைப்பதுடன் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதையும் பெரும்பான்மை மக்கள் நோக்கமாகக் கொண்டிருந்தனர். இதனை முன்னிறுத்தி, மக்கள் இந்த ஆண்டு எதிர்கொண்ட சிக்கல்கள் மற்றும் 2020ஆம் ஆண்டில் எளிதில் கிடைத்த உணவுகள் ஆகியவை குறித்து இங்கே காண்போம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

வைட்டமின் சி நிறைந்த உணவுகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதே இந்த ஆண்டு பேசுபொருளாக இருந்த நிலையில், மக்கள் சிட்ரஸ் அமிலச்சத்து நிரம்பிய உணவுகள் மற்றும் அதிக அளவு வைட்டமின் சி கொண்ட உணவுகளையும் உட்கொண்டனர். வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சங்காய், எலுமிச்சைப் பழம், ஆரஞ்சு, நெல்லிக்காய், கிவி, மாதுளை, ஆப்பிள் ஆகியவை உணவில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்த துளசி, பூண்டு, ஆளி விதைகள் (flax seeds), பெர்ரி, பீன்ஸ் ஆகியவையும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. தவிர, மக்கள் தங்கள் அன்றாட உணவில் வைட்டமின் டி, புரதம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களையும் தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டுள்ளனர்.

தூக்கமின்மையைத் தவிர்க்க

இந்த ஆண்டு மக்கள் சமூகத்திலிருந்து விடுபட்டு வீடுகளிலேயே தனித்து முடங்கியிருந்த காரணத்தால், அவர்களின் சிந்தனை பெருமளவு பாதித்தது. எதிர்காலத்தின் நிச்சயமற்ற தன்மைகள் சமாளிப்பது, மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் ஆகியவற்றின் விளைவாக பலருக்கும் தூக்கமின்மை ஏற்பட்டது. சூடான பால், பருப்பு வகைகள், சீமை சாமந்தி தேநீர் (chamomile tea), கிவி, கொழுப்பு நிறைந்த மீன்கள் ஆகியவை நல்ல தூக்கத்தை வரவழைக்க உதவும்.

மனநிலையை உற்சாகப்படுத்த

நாம் சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, நம் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இந்த ஆண்டு மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் ஆகிய மனநலப் பிரச்னைகளே மக்களை பெரும்பாலும் ஆக்கிரமித்திருந்த நிலையில், முட்டை, டார்க் சாக்லேட், தயிர், க்ரீன் டீ, பருப்பு வகைகள், காபி, குங்குமப்பூ, பீன்ஸ் மற்றும் பயறு வகைகள் ஆகிய உணவுகளை எடுத்துக்கொண்டு மக்கள் தொடர்ந்து தங்கள் மனநலனைப் பேணலாம்.

ஊட்டச்சத்து

ஆற்றலை அதிகரிக்க

நாள் முழுவதும் மக்கள் வீட்டில் இருந்தது சோம்பலுக்கு வழிவகுத்த நிலையில், இந்த ஆண்டு பெரும்பாலான நாள்கள் பயனற்று கழிந்தன. இனியும் ஊரடங்கு, பொது முடக்கங்கள் விதிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், மக்கள் வாழைப்பழம், ஆப்பிள், காபி, ஸ்ட்ராபெரி, டார்க் சாக்லேட், பருப்பு வகைகள், பச்சை இலை காய்கறிகள் போன்றவை உடலுக்கு ஆற்றல் அளித்து நாளை உற்சாகமாக்க வழிவகுக்கும்.

நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதே நம்மைத் தீர்மானிக்கிறது என்ற கூற்றிற்கு ஏற்றார்போல நமது உணவே நம் ஆரோக்கியத்தைப் பிரதிபலிக்கிறது. ஆரோக்கியமான உணவு நம் மனநிலையை மேம்படுத்துவதோடு, நாள் முழுவதும் நம்மை உற்சாகமாக வைத்துக் கொள்ளும். மறுபுறம், ஆரோக்கியமற்ற தின்பண்டங்களும், அளவற்ற உணவு எடுத்துக்கொள்வதும் மனநலன், உடல் நலன் இரண்டையுமே பாதிக்கிறது. எனவே, புரோபயாடிக், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள், ஃபோலேட், வைட்டமின் ஏ, சி மற்றும் டி, புரதங்கள், துத்தநாகம், மெக்னீசியம் என அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

ABOUT THE AUTHOR

...view details