சென்னை:இளமையாக இருக்க யாருக்குத் தான் பிடிக்காது. 45 வயதிலும் 25 வயதுடையவர் போல் ஜொலிக்க யாருக்குத் தான் ஆசை இருக்காது. வயதாகும் போது நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள் நன்றாகத் தெரியும். வயதாக வயதாகத் தோலில் சுருக்கங்கள் ஏற்பட்டு, முகம் அழகை இழந்து விடும். இளமையான தோற்றத்தைப் பெறுவதற்காக அதிகப் பணம் செலவழித்து, க்ரீம்களையும், ட்ரீட்மெண்ட்களையும் கூடச் செய்து வருகின்றனர். ஆனால், ஒரு ரூபாய் கூட செலவில்லாமல், நாள்தோறும் நாம் செய்யும் வேலைகளைச் சரி வரச் செய்தாலே போதும். 60 வயதிலும் 30 வயதுடையவராக இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம். இளமையாகத் தோற்றம் அளிக்க, என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக் கூடாது என்பதைப் பற்றிப் பார்க்கலாமா!
தூக்கம் ரொம்ப முக்கியம்: போதுமான தூக்கம் இல்லையென்றால், உடலும் மூளையும் சோர்வடைந்து விடும். உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைந்து, உடல்நல பாதிப்புகளும் ஏற்படும். ஸ்ட்ரஸ் ஹார்மோன் எனப்படும் கார்டிசோல் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். இதனால், தோலில் சுருக்கங்கள், நரை முடி போன்ற முதுமைக்கான அறிகுறிகள் தோன்றும். பெரியவர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் வரையும், குழந்தைகள் 8 முதல் 12 நேரம் தூங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
No... சிகரெட்ஸ்: தற்போதைய காலத்தில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் புகைபிடிக்கின்றனர். புகை பிடிப்பதால், மூளை பலவீனமாகிறது. இதனால், முதுமைக்கான அறிகுறிகள் விரைவில் தோன்றுகின்றன. புகை பிடிப்பதை நிறுத்தினால், உடல் நலப்பிரச்சினைகள் ஏதுவுமின்றி நலமாகவும், இளமையாகவும் வாழலாம்.
வெயிலில் செல்வதை தவிர்க்கவும்:வெயிலில் அதிக நேரம் இருக்கும் போது, சருமம் பொலிவிழந்து, முகத்தில் சுருக்கங்களும், கரும் புள்ளிகளும் தோன்றும். வெயிலில் செல்லும் போது SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கிரீனை (Sun Screen) பயன்படுத்துவது நல்லது.
உடற்பயிற்சி அவசியம்: தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடலும், மனமும் புத்துணர்வு பெறும். இதனால் முதுமைக்கான செயல்முறை குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தினமும் சிறிது நேரம், யோகா மற்றும் தியானம் செய்வது அவசியமாகும். நோய்களையும் தடுக்க முடியும்.