மழைக்காலத்தில் உடல் எதிர்ப்புச் சக்தியோடு இருக்க எப்படி நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமோ, அதே போன்று வீட்டையும் மழைக்காலத்துக்கு முன்பு தயார்படுத்திவைக்க வேண்டும். குறிப்பாக பழைய கால வீடுகளை இன்னும் கூடுதல் கவனத்தோடு தயார்ப்படுத்த வேண்டும்.
மழை வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவது நல்லதல்ல. மழை வந்த பிறகு வீட்டைப் பராமரிப்பது சிரமமான வேலை. சொந்த வீட்டை மட்டும்தான் பராமரிக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் குடியிருக்கும் வீட்டில் நாம்தான் வசிக்கிறோம் என்பதால் அதிக சேதாரமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நீர் ஒழுகுவதை முற்றிலும் தடை செய்க
தளம் போட்ட வீடுகளாக இருந்தால் வெதரிங் கோஸ்ட் போட்டு வைக்கலாம். இது தளங்களில் ஒழுகுதலைத் தடுக்கும். சுவர் ஓதங்கள் இல்லாமல் வைக்கும். மொட்டை மாடியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துகொள்ள வேண்டும். மொட்டைமாடியில் தண்ணீர் செல்லும் பாதையில் அடைப்பு இருந்தால் அதை மழைக்கு முன்பே சுத்தம் செய்வது அவசியம். மழைநீர் தொட்டியில் தண்ணீர் சுத்தமாக நிரம்பும்.
மழைக்காலம் வந்தாலே வீட்டில் இருக்கும் மரக்கதவுகள், ஜன்னல்கள் லேசாக உப்பலடையும். அதிலும் கொஞ்சம் பழைய கால வீடாக இருந்து கதவு ஜன்னல்கள் பழையதாக இருந்தால் இன்னும் கூடுதல் கவனம் தேவை.
இந்த நேரத்தில் வீட்டை கழுவினால் அவை இன்னும் உப்பலாகி இருக்கும். கதவுகள் பக்கம் தண்ணீர் தேங்காமல் வெறும் மாப் கொண்டு துடைக்க வேண்டும். உலர்ந்த துணியைக் கொண்டு அவ்வப்போது சுத்தமாகத் துடைக்க வேண்டும். தரையையும் ஈரம் இல்லாமல் வைக்க வேண்டும்.
மரச்சாமான்கள் மீது கவனம் தேவை
மழைக்காலங்களில் கதவுகள், ஜன்னல்கள் மேலும் இறுக்கமாகிவிடக்கூடும். குழந்தைகள் வேகமாகத் திறக்கும்போது கதவுகள் சேதமடையும். ஜன்னல்களும் திறக்க முடியாமலும் போகும். சில நேரங்களில் திறந்த பிறகு மூடுவதில் சிரமம் இருக்கலாம்.
இது தற்காலிகமானது, மழைக்காலம் முடிந்த பிறகு அவை தானாகவே சரி ஆகிவிடும். எனினும் பாதிப்பில்லாமல் இருக்க மழை வருவதற்கு முன்பே கதவுகளிலும் ஜன்னல்களிலும் கைப்பிடி தாழ்ப்பாள் போன்ற இடங்களில் எண்ணெய்விட வேண்டும்.