சென்னை: குளிர்காலத்தின் குளுகுளுப்பு நம்மை மகிழ்வடைய செய்தாலும். குளிர்காலம் நம்மை சோம்பேறியாக்கிவிடும். குளிர் அதிகரிக்க அதிகரிக்க படுக்கையை விட்டு எழ மனம் விரும்பாது. போர்வைக்குள்ளே இருந்து உடலின் வெப்பத்தை தக்க வைத்துக்கொள்ளவே மனம் எண்ணும்.
இந்த சமயத்தில் உடலின் மெட்டபாலிசம் குறைய ஆரம்பிக்கும். நமக்கு உடல் உழைப்பும் குறைந்து, அனைத்து கலோரிகளும் சேர்ந்து உடல் எடையை அதிகரிக்க செய்யும். ஆகவே விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். சரியான உணவுமுறைகளை கையாள்வதன் மூலமாக குளிர்காலத்திலும் தடையில்லாமல் டயட்டை மேற்கொள்ள முடியும். இதற்கு ஐந்து வேர் காய்கறிகள் (Root Vegetables) மட்டும் போதும்.
ஏன் வேர் காய்கறிகள்:குளிர் காலத்தில் பொதுவாகச் சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பீட்ரூட், இஞ்சி, டர்னிப், கேரட் உள்ளிட்ட பல வேர் காய்கறிகள் மற்ற காய்கறிகளை விட விளைச்சல் அதிகமாக இருக்கும். பனி காரணமாக மற்ற காய்கறிகள் அழுகிப் போகுதல், விளைச்சல் பாதிப்படைதல் உள்ளிட்டவை இருக்கும். ஆனால் வேர் காய்கறிகள் மலிவான விலையில் அதிகமாகவே கிடைக்கும்.
இந்த காய்கறிகளைக் குளிர் காலத்தில் நாம் உட்கொள்ளும்போது உடலின் வெப்ப நிலையைச் சரியான கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். மேலும், குளிர் காலத்தில் பொதுவாகச் செரிமான பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த வேர் காய்கறிகள் செரிமான பிரச்சனைகளுக்குத் தீர்வாவதுடன் உங்களுக்குத் தேவையான முழுமையான ஊட்டச்சத்துக்களையும் வழங்கும். ஆற்றல் குறைபடாமல் பாதுகாத்து உங்கள் அன்றாட வேலைகள் பாதிப்படையாத வகையில் வைத்திருக்கும்.
பருவகாலங்களில் கிடைக்கும் காய்கறி மற்றும் பழ வகைகளுக்கு அந்தந்த பருவகாலத்தில் உடலைப் பாதுகாத்துக்கொள்வதற்கான ஆற்றல் இயற்கையாகவே உள்ள நிலையில் இவற்றை நம் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாக்கும் மகத்தான பணியைச் செய்கிறது. அந்த வகையில் இந்த வேர் காய்கறிகளில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்பதைப் பார்க்கலாம்.