கரோனா தொற்றின் பலனாக அவசரமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் பலரும் விழித்துக்கொண்டுள்ளனர். நம் தேவைகளின் அவசியம் குறித்து அறிந்துகொண்டு குறைந்த பொருள்களை வைத்துக்கொண்டே நமது அன்றாட வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு வருகிறோம். அதேபோல பெண்களும் பல நாள்கள் நீடிக்கக்கூடிய பொருள்கள் குறிப்பாக நகைகளைத் தேர்வுசெய்ய தொடங்கியுள்ளனர். பெண்களுக்கு பிடித்தமானவைகளுள் ஒன்று அணிகலன்கள் என்றே கூறலாம். அந்த நகைகளை அவர்கள் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுப்பார்கள். அப்படி நம் பாட்டி, அம்மா காலத்திலிருந்து உபயோகப்படுத்தப்பட்டு வந்த நகைகள் எல்லாம் இந்தக் காலத்தில் இருக்கும் ட்ரெண்டுக்குள்ளும் அடங்கும். அப்படி காலம் கடந்தும் நிலைக்கும் அணிகலன்கள் குறித்து பார்ப்போம்.
முத்து நெக்லஸ்
முத்து நெக்லஸ் என்பது ஆதி காலத்தில் இருந்தே கிளாசிக் நகையாகக் கருதப்படுகிறது. பொதுவாக முத்து என்றாலே வெண் முத்துதான் நம் அனைவரின் சிந்தனையிலும் எட்டிப்பார்க்கும். ஆனால் கருப்பு, பச்சை போன்ற முத்துக்கள் மிக நேர்த்தியாக இருக்கும். இந்திய, மேற்கிந்திய ஆடைகளுடன் முத்து நெக்லஸ் ஒன்றிப்போகும். ஒரு அடுக்கு அல்லது பல அடுக்குகள் கொண்ட முத்து நெக்லஸை யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா?
ஸ்டட் வகையான காதணிகள் (Stud):
வைரம் அல்லது வைரம் போன்ற சிறிய காதணிகள் நம் தோற்றத்தை மேலும் மேம்படுத்திக் காட்டும். அது நம் முகத்தை நேர்த்தியாகவும் காட்டும். எந்த விதமான உடையுடனும் ஸ்டட் வகை காதணிகள் பொருந்திப்போகும். கிளாஸி லுக்கையும் கொடுக்கும். பெண்கள் தங்களது நகைப் பெட்டியில் நிச்சயம் ஜொலிக்கும் ஒரு ஸ்டட் காதணியை வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படிப்பட்ட கம்மலை அணியும்போது மின்னுவது வைரம் மட்டுமல்ல, அவர்களின் சிரிப்பும்தான்.