சென்னை: உயரத்திற்கேற்ற எடையைக் கணக்கிடும் அளவீட்டை பிஎம்ஐ (BMI- Body Mass Index) எனக் கூறப்படுகிறது. இது உடல் எடை மற்றும் மனிதர்களின் உடல் ஆரோக்கியம் உள்ளிட்டவை குறித்து துல்லியமாக அளவிடும் எனப் பலரும் நினைத்துள்ளனர். ஆனால் இந்த BMI-யை மருத்துவர்கள் மற்றும் மருத்து ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பலரும் உடல் எடையைக் கணக்கிட ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
BMI என்றால் என்ன?BMI என்பது மனிதர்களில் நான்கு வேறுபட்ட எடைப்பிரிவை வரிசைப் படுத்தி ஆய்வு அல்லது பரிசோதனை மேற்கொள்ளும் ஒரு முறையாகும். இதில் உடல் நிறை குறியீடு எண் BMI 18.5-க்கும் குறைவாக இருந்தால் அது குறைந்த எடைப் பிரிவு எனவும், BMI 18.5 முதல் 24.9-க்கும் இடைப்பட்டு இருந்தால் அது சாதாரண எடைப் பிரிவு எனவும், BMI 25.0 முதல் 29.9-க்கும் இடைப்பட்டு இருந்தால் அதை மிகை எடை எனவும் BMI 30-க்கும் அதிகமாக இருந்தால் அதை அதீத மிகை எடை எனவும் அளவிடப்படுகிறது. இது ஒருவரின் உயரத்துடனான எடையை ஒப்பிட்டுக் கணக்கிடும் ஒரு ஆய்வு முறையாகும்.
BMI-யை கண்டு பிடித்தவர் யார் தெரியுமா? பெல்ஜியத்தை சேர்ந்த கணிதவியலாளர் Lambert Adolphe Jacques Quetelet என்பவர் கடந்த 1832ஆம் ஆண்டு இந்த BMI-யை கண்டுபிடித்துள்ளார். ஆரம்பக்கட்டத்தில் மேற்கு ஐரோப்பிய மனிதர்களின் உடல் எடை உள்ளிட்டவற்றை மட்டும் கணிக்கப் பயன்படுத்தப்பட்ட நிலையில் இது மருத்துவ உலகில் அங்கீகரிக்கப்பட்டு Quetelex என்ற முறை BMI- என மாற்றம் பெற்றுக் கடந்த 1972ஆம் ஆண்டு உலக அளவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
BMI எதற்காகப் பயன்படுகிறது? BMI ஒரு கணித சூத்திரமாக உள்ள நிலையில் மனிதனின் எடையை உள்ளடக்கிய ஆய்வை மட்டுமே இதனை வைத்து மேற்கொள்ள முடியும். மருத்துவ ரீதியாக இது உடல் ஆரோக்கியம் மற்றும் கொழுப்பின் அளவீடு குறித்து BMI-யை வைத்து எவ்வித தகவலைப் பெற முடியாது.
நீரிழிவு, வளர்சிதை மாற்றக் கோளாறு, இதய நோய் உள்ளிட்ட சில பிரச்சனைகள் தொடர்பான உடல் உபாதைகளை BMI மூலம் முன்கூட்டியே கணிக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், இதன் மூலம் பாலினம், வயது உள்ளிட்டவைகள் குறித்துக் கணிக்க முடியாது எனவும் ஐரோப்பிய ஆண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த BMI, மாதவிடாய் நின்ற பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட பலருக்குப் பொருந்தாது எனவும் கூறியுள்ளனர்.
மருத்துவத்துறையில் BMI மீது இருக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கை நோயாளிகளின் ஆரோக்கியத்தைக் கேள்விக் குறியாக்கி விடும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.