சென்னை:உரையாடல் என்பது தெரிந்தவர்கள், சக ஊழியர்கள் அல்லது அந்நியர்களுடன் நாம் மேற்கொள்ளும் ஒரு பேச்சாடல். ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளும்போது பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்வோம். அந்த நேரம் மனம் லேசாகும், புதிய தகவல்களைத் தெரிந்துகொள்வோம், அவர்களின் அனுபவம் உங்களுக்கு ஒரு பாடமாக அமையும் இப்படிப் பல அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் சிலர் ஒருவரோடு எப்படிப் பேச ஆரம்பிக்க வேண்டும். அந்த உரையாடலையும், அந்த நபரையும் எப்படித் தக்க வைக்க வேண்டும் என்ற புரிதல் இல்லாமல் பிரச்சனைகளுக்கு வழிவகை செய்து விடுவார்கள். இது பெரும்பாலும், காதல் விவகாரத்தில் அதிகம் நடைபெறுகிறது.
ஒருவரோடு உரையாட வேண்டும் என்றால் முதலில் நீங்கள் அவர் மீதும் அவரது பேச்சின் மீதும் ஆர்வம் காட்ட வேண்டும்;நீங்கள் பேச நினைக்கும் நபரிடம் அக்கறை காட்டுங்கள். அவருக்குப் பிடித்த விஷயங்கள், பொழுதுபோக்கு மற்றும் அவருக்கான தனிப்பட்ட கருத்துகள் குறித்து வெளிப்படையாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் கேட்கும் கேள்விக்கு அவர் அளிக்கும் பதில் ஆம், இல்லை என்பதோடு முடிந்துவிடாத வகையில் இருக்க வேண்டும்.
உதாரணமாக, பயணம் செய்வது உங்களுக்குப் பிடிக்குமா? என்று கேட்பதற்குப் பதிலாக உங்களுக்குப் பிடித்த இடங்கள் எவை.. நீங்கள் பயணம் செய்ய வேண்டும் என்றால் எங்கெல்லாம் செல்வீர்கள் என்று கேட்க வேண்டும். இப்படி நீங்கள் கேட்கும்போது அவரை பற்றி விளக்கிக் கூற நீங்கள் ஒரு வழியை ஏற்படுத்தியதாகவே இருக்கும். மேலும் அது அவரை உங்களோடு பேச ஊக்குவிப்பது மட்டும் இன்றி அவருடன் பேச நீங்கள் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதைத் தோற்றுவிக்கும்.
சூழல் அறிந்து பேசுதல்;நாம் மற்றவரோடு உரையாட நினைக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் சூழல் அறிந்து பேசுதல். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவருடன் எப்படிப் பேச வேண்டும். ஒரு பார்ட்டிக்கு சென்றிருக்கும்போது அங்கு ஒரு நபருடன் எப்படிப் பேச வேண்டும்.
ஒரு வணிக மாநாட்டில் தொழில் அதிபர் ஒருவரைச் சந்தித்தால் அவரிடம் என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும், ஒரு அரசியல் கூட்டத்தில் பங்கேற்று அரசியல்வாதியைச் சந்தித்தால் என்ன பேச வேண்டும். பேருந்தில் ஒரு நபரிடமோ, திருமண நிகழ்வில் ஒரு இளம்பெண் அல்லது இளைஞரிடமோ பேச வேண்டும் என்றால் அந்த சூழலுக்கு ஏற்றவாறு அதற்கான கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும்.