சென்னை: ஆயுத பூஜை, தீபாவளி என பண்டிகைகள் வரிசையாக வரவுள்ளன. புத்தாடை, பட்டாசு என கோலாகலமாக கொண்டாடவுள்ள பண்டிகை நாட்களில் முக்கியமான ஒன்று பலகாரங்கள். ஜிலேபி, லட்டு, மைசூர்பா, பால்கோவா உள்ளிட்ட பல இனிப்பு வகைகள் மற்றும் மிக்சர், பூந்தி, காரா சேவா, முறுக்கு உள்ளிட்ட பல எண்ணெய் பலகாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் நம் தாத்தா, பாட்டி காலத்தில் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் தயாரிப்பார்கள்.
ஆனால் இன்றைய காலத்தில் அவ்வளவு சிரமப்பட யாருக்கும் நேரமும் இல்லை மனமும் இல்லை என்றே கூறலாம். இந்நிலையில் பலர் கடைகளில் விற்கும் பலகாரங்களை வாங்கி பண்டிகை நாட்களை கொண்டாடுவார்கள். அவர்களுக்குதான் இந்த தகவல்..
பண்டிகை நாட்களை குறிவைத்து நடக்கும் மோசடி;பண்டிகையை கொண்டாட நாட்களை எண்ணி நாம் காத்திருப்பதுபோல், பழைய எண்ணெய் மற்றும் தரமற்ற பொருட்களை வைத்து பலகாரங்கள் தயாரித்து அதை வாடிக்கையாளர்கள் தலையில் கட்ட பலர் காத்திருக்கின்றனர். பண்டிகை நாட்களை குறிவைத்து நடைபெறும் இதுபோன்ற தரமற்ற உணவு மோசடியில் இருந்து நம்மையும், நம் உறவுகளின் ஆரோக்கியத்தையும் தற்காத்துக்கொள்ள வேண்டும். அதற்காக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலாகவும் உள்ளது.
அரசு அதிகாரிகள் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை;கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பண்டிகை நாட்களில் பலகாரங்களை தயாரிக்கவும், அதை விற்பனை செய்யவும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
அவை;
- ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயில் வேறு பலகாரங்களை தயாரிக்கக்கூடாது
- பலகாரங்களில் அனுமதிக்கப்பட்ட நிறமிகளை மட்டுமே சேர்க்க வேண்டும்
- தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கொண்டு பொட்டலமிடக்கூடாது
- தரமான மூலப் பொருட்களைக் கொண்டு மட்டுமே பலகாரங்களை தயாரிக்க வேண்டும்
- பால் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை தனியாக இருப்பு வைக்க வேண்டும்
- மூலப்பொருட்கள், உபயோகத்திற்கான கால கெடு உள்ளிட்ட அனைத்தும் பேக்கிங்கில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்
- தூய்மையான குடிநீரைக் கொண்டே அனைத்தும் தயாரிக்கப்பட வேண்டும்
உள்ளிட்ட பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதை மீறி செயல்படும் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.