புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த கலைலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிணை மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை ஆராய்ந்த நீதிபதி கிருபாகரன், "தமிழ்நாடு விடுதலை - தமிழ் மொழி என்ற முழக்கங்களுடன் சில அமைப்புகள் செயல்பட்டுவருகின்றன. இந்த அமைப்புகள் தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற முகமூடியை அணிந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் அசாதாரண நிலையை ஏற்படுத்த இத்தகைய முழக்கங்களை எழுப்பிவரும் சில அரசியல் கட்சிகளும் மறைமுகப் பரப்புரைகளை மேற்கொண்டுவருகின்றன.
இதுபோன்ற குழுக்கள் நாட்டின் ஜனநாயகத்திற்குப் பெருத்த சேதத்தை ஏற்படுத்திவருகின்றன. தமிழ்நாட்டில் 1967ஆம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் அல்லாத மற்ற கட்சிகள் ஆட்சி அதிகார அரியணையைக் கைப்பற்றிவருவதற்கு தமிழ் மொழியே காரணம்.
மொழி என்று வரும்போது பல மாநிலங்கள் அதைத் தீவிரமாகக் கருதுவதால், அரசியல் சாசனம் 22 மொழிகளை அங்கீகரித்துள்ள நிலையில், தங்கள் தாய்மொழி இருட்டடிப்பு செய்யப்படுவதாக குறிப்பிட்டு சில அமைப்புகள் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திவருகின்றன.
மதவாத சக்திகளையும், பயங்கரவாத சக்திகளையும் திடமாக எதிர்க்க வேண்டும். இன மொழி பேரினவாதத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது. இதுபோன்ற சக்திகள் தலையெடுக்க அனுமதிக்கக் கூடாது. குற்றஞ்சாட்டப்பட்ட கலையின் பிணை மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்" எனக் கூறினார்.
நீதிபதி கிருபாகரன் உத்தரவுக்கு சம்மதம் தெரிவித்த நீதிபதி ஹேமலதா, தமிழ் அமைப்புகள், மொழி தொடர்பான கருத்துகள் இந்த வழக்கில் தொடர்பில்லாதது என்பதால் அவற்றுடன் ஒத்துப்போகவில்லை என மாற்றுக் கருத்தைத் தெரிவித்தார்.