மனிதன் ஒரு சமூக விலங்கு. ஆனால் ஓய்வின்றி ஓட வேண்டிய தற்கால வாழ்க்கை முறையும், தொழில்நுட்பமும் மனிதர்களை ஆக்கிரமித்து, அவர்களது எண்ண ஓட்டங்களை அதிகரித்து, தனிமையில் ஆழ்த்தியுள்ளது. வளர வளர தன் அன்றாட உணர்வுகளை குடும்பத்தினரிடம்கூட வெளிப்படுத்தாமல், சக மனிதர்களிடமிருந்தே தனிமைப்படுத்தப்பட்டு, பொருள் தேடி ஓடும் நிலைக்கு காலம் மனிதர்களைத் தள்ளி விடுகிறது. இவற்றின் வெளிப்பாடே மன அழுத்தம், மனச் சோர்வு மற்றும் தற்கொலை எண்ணங்கள்.
இந்நிலையில், ஒருவர் தன்னுடைய உணர்வுகளை பிறருடன் பகிர்ந்து வருவதும், தான் மனதில் நினைப்பதை வெளிப்படுத்தி வருவதாலும் மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணங்களை எதிர்த்துப் போராட முடியும் என்று மேற்கு வங்கத்தின் பிரபல மனநல மருத்துவர் தேவி பிரசாத் ராய்சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "மக்கள் அனைவரும் முதலில் சமூக ரீதியாக பின்னிப் பிணைந்திருக்க வேண்டும், தாங்கள் நினைப்பதை தயக்கமின்றி பகிர்ந்து கொள்ள நண்பர்கள், உறவினர்கள் அல்லது நெருங்கிய நபர்களைக் கொண்டிருக்க வேண்டும். இது ஒரு விதத்தில் தற்கொலைக்குத் தூண்டும் எண்ணங்களைக் குறைக்கும்.
இந்தக் கரோனா ஊரடங்கின் மத்தியில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு, வேலையின்மை அதிகரித்துள்ளது. இதனால், பலர் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கு இன்னும் பல காரணங்கள் உள்ளன. வயதானவர்களும்கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள். தனிமையாக உணர்வதை தற்கொலைக்கு ஒரு முக்கியக் காரணமாகக் கூறலாம்” எனத் தெரிவித்துள்ளார்.