சென்னை:மூச்சு பயிற்சிதானே அதை எடுத்தால் என்ன? எடுக்காவிட்டால் என்ன? அதை நான் எதற்கு எடுக்க வேண்டும்? எனக்கென்ன ஆஸ்துமாவா இருக்கு என்றெல்லாம் நினைக்கிறீர்களா? அடுத்த நாள் யாருக்கு என்ன நோய் வரும் என்று தெரியாத கால கட்டத்தில் நகரும் வாழ்க்கைச் சூழலில் இருக்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்யவே இந்த மூச்சு பயிற்சி. நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் மூச்சு பயிற்சியைச் செய்துவிட்டு அந்த நாளை தொடங்குங்கள். இது உங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றல், நோய் எதிர்ப்புத் திறன், புத்துணர்ச்சி உள்ளிட்ட பல நன்மைகளை வழங்கும்.
மூச்சு பயிற்சியில் பல வகை இருக்கின்றன. மன அழுத்தம் குறைய, மூச்சு திணறல் சரியாக உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இருந்தாலும், ஆரம்பக் கட்டத்தில் நீங்கள் இரண்டு வகையான பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அது உங்களுக்கு பொதுவான அனைத்து நலனும் வழங்கும்.
அவை நாடி சுத்தி மற்றும் பிராணயாமா;
நாடி சுத்தி எப்படிச் செய்ய வேண்டும்: ஒரு மூக்கு துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுத்து மற்ற மூக்கின் துவாரம் வழியாக மூச்சை வெளியே விடுவது நாடி சுத்தி மூச்சு பயிற்சி. இந்த பயிற்சியின்போது மூச்சை உள்ளே இழுக்கும் நேரத்தை விட, வெளியே விடும் நேரம் இரண்டு மடங்காக இருக்க வேண்டும். வலது மூக்கின் வழியாக மூச்சை உள்ளே இழுத்தால் இடது மூக்கின் வழியாக மூச்சை வெளியே விட வேண்டும்.
உடனே இடது மூக்கின் வழியாக மூச்சை உள்ளே இழுத்து வலது மூக்கின் வழியாக மூச்சை வெளியே விட வேண்டும். இப்படி நாள் ஒன்றுக்கு சுமார் அரை மணி நேரமாவது செய்ய வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் இந்த மூச்சு பயிற்சியைச் செய்வது சிறந்தது. ஆனால் அப்போது மட்டும்தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
நாடி சுத்தி மூச்சு பயிற்சி செய்யும் போது உங்கள், இடது கை சின்முத்திரையிலும், வலது கை நாசிகா முத்திரையிலும் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது இடது கையின் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலைச் சேர்த்துப் பிடிக்க வேண்டும். அதேபோல, வலது கையின் ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரல் இரண்டையும் மடக்கிக் கொண்டு மூச்சுப் பயிற்சியைச் செய்ய வேண்டும்.
பிராணயாமா செய்வது எப்படி: இரண்டு மூக்கு துவாரங்கள் வழியாகவும் மூச்சை உள்ளே இழுத்து நிறுத்தி, இழுக்கும் நேரத்தில் இருந்து இரண்டு மடங்கு நேரம் எடுத்து அந்த மூச்சுக் காற்றை வெளியே விடுவதுதான். அமைதியாக ஒரு இடத்தில் ஆசனம் செய்வதற்குத் தகுந்தார்போல் அமர்ந்துகொள்ளுங்கள். அந்த நேரம் உங்கள் முழு கவனமும் உங்கள் உயிர் மூச்சில்தான் இருக்க வேண்டும். நிதானமாக மூச்சை உள்ளே இழுத்து வெளிவிடுவதன் மூலம் நீங்கள் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
யார், யார் இந்த மூச்சு பயிற்சியைச் செய்ய வேண்டும்: பொதுவாக நாம் அனைவருமே செய்ய வேண்டிய மிகச் சிறந்த ஆசனம் மூச்சு பயிற்சி. ஆனால் இந்த பயிற்சியை ஆசிரியர்கள், பேச்சாளர்கள், உடல் வருத்தி உழைப்பவர்கள், ஜிம் செல்லும் இளைஞர்கள், ஒரே இடத்தில் அமர்ந்தவாறு பணியாற்றும் நபர்கள் இதைக் கட்டாயம் செய்ய வேண்டும். ஏன் என்றால் அவர்களது உடல் சூடு சமநிலையில் இருக்காது. கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். இந்த நாடி சுத்தி மற்றும் பிராணயாமா மூச்சு பயிற்சி செய்யும்போது உங்கள் உடல் சாதாரண நிலைக்கு வந்துவிடும்.
எந்தெந்த நோய்களுக்கு இது தீர்வாக அமையும்:பைல்ஸ், விரை வீக்கம், சமமற்ற உடல் சூடு, வலிப்பு, மன அழுத்தம், உடல் சோர்வு மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இந்த மூச்சு பயிற்சி தீர்வாக அமையும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். நோய்களுக்கு மருத்துவர்களை அணுகி நீங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டு, அதனுடன் இந்த மூச்சு பயிற்சியும் மேற்கொள்ளுங்கள். நோய் வரும் முன் காப்பது சிறந்தது, ஆகவே வருவதற்கு முன்பு இந்த பயிற்சியை எடுப்பது சிறந்தது.
இதையும் படிங்க:How to whiten your teeth naturally: பற்கள் மஞ்சளா இருக்கா? கரை இருக்கா? முத்துப்போன்ற பற்களைப் பெற இதை ட்ரை பண்ணுங்க.!