தரையில் அமர்ந்து உணவு உண்ணுவது என்பது இந்தியாவின் ஒரு பழைய பாரம்பரியமாகும். குறிப்பாக தமிழ்நாட்டில் தரையில் அமர்ந்து உண்ணும் பழக்கம் ஆதி காலத்திலிருந்தே உள்ளது. அப்படி நம் வீட்டில் தாத்தா, பாட்டி இருந்திருந்தால், அவர்கள் தரையில் அமர்ந்து உட்கொண்டு, நிறைந்த மனதுடன் செல்வதை நம்மால் காண முடியும். ஏன், உணவிலிருந்து ஊட்டச்சத்தைப் பெற வேண்டும் என்றால் இந்த முறையைத்தான் மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர்.
ஆனால் இப்போது உள்ள மக்களுக்கு டைனிங் டேபிளில் ஹாயாக அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டோ அல்லது படுக்கையில் அமர்ந்துகொண்டோ உண்ணுவது வசதியாக இருப்பதுபோல் நமக்குத் தோன்றலாம். ஆனால் அவ்வாறு உண்ணக் கூடாது என்றும் தரையில் அமர்ந்து உண்ணுவது செரிமானம், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது எனவும் விளக்குகிறார் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தோரில் உள்ள நேரு குழந்தைகள் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஊட்டச்சத்து மருத்துவர் சங்கீதா மாலு.
நின்று உணவு உண்டால் என்ன ஆகும்?
- நின்று உண்டால், நீங்கள் எடுத்துக்கொண்ட உணவு செரிமானம் ஆவதில் தடைப்படும் எனக் கூறும் மருத்துவர் சங்கீதா, அமர்ந்திருந்து உண்ணும்போது நாம் மிகவும் வசதியாக உணர்கிறோம். மேலும் இது நம் உடல், மனம் என இரண்டையும் அமைதியாக உணரவைக்கிறது. ஆகையால், நாம் அமர்ந்து உண்டால், உணவு செரிமானத்தின் அனைத்துச் செயல்முறைகளும் நன்றாக நடக்கும்.
- அதுமட்டுமின்றி, பூமியின் ஈர்ப்பு விசையின் காரணமாக, நாம் நின்று உணவை உண்டால், உணவு உடலில் உள்ள அனைத்து செரிமான உறுப்புகளையும் விரைவான வேகத்தில் கடந்து செல்கிறது. இதனால், நாம் உண்ட உணவு செரிமானம் ஆவதில் தடைப்படுகிறது.